வீட்டில் இருந்தபடியே ஒரு லாபகரமான தொழில் செய்ய வேண்டுமென்றால் காளான் வளர்ப்பு நல்ல சாய்ஸ். இதற்கு ஓர் உதாரணமாக விளங்குகிறார் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகருக்கு அருகே உள்ள இரணியல்கோணத்தைச் சேர்ந்த ஜெஸ்மி. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி அக்ரி பயின்ற இவர் காளான் வளர்ப்பைத் தொடங்கி தற்போது நல்ல வருமானம் பார்த்து வரும் ஜெஸ்மியைச் சந்தித்துப் பேசினோம். ``பிஎஸ்சி அக்ரி படிக்கும்போது காளான் வளர்ப்பு குறித்த பாடத்திட்டமும் இருந்தது. அதைப் படிக்கும்போதே காளான் வளர்க்கலாம் என முடிவு செய்தேன். படிப்பு முடிந்தபிறகு காளான் வளர்ப்பில் இறங்கினேன். இதற்காக கடந்த 2022ம் ஆண்டு தோட்டக்கலைத்துறையின் மூலம் ரூ.2 லட்சம் மானியம் பெற்றேன். இந்தப் பணத்தில்தான், 600 சதுர அடியில் ெஷட் அமைத்தேன். மேலும், காளான் விதை உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களையும் வாங்கினேன். காளான் உற்பத்திக்கான தாய் விதையை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்திலேயே வாங்கினேன். தாய் காளான் விதைகளுடன் அவித்த மக்காச்சோளத்தைக் கலந்து விதைகளை உற்பத்தி செய்து வருகிறேன். தற்போது நான் 300 பெட் அமைத்து காளான் வளர்க்கிறேன். இதற்கு தரமான வைக்கோல் தேவைப்படுகிறது. நன்றாக முதிர்ந்த வைக்கோலில் காளான் விதைகளை வைத்து பெட் செய்யும்போது, ஒரு பெட்டில் 400 கிராம் முதல் 750 கிராம் வரை காளான் கிடைக்கும்.
பாலித்தீன் கவரில் வைக்கோலை நனைத்து வைத்து, அதன்மீது காளான் விதை, அதன் மீது வைக்கோல் என 3 அடுக்கு விதைகளும், 4 அடுக்கு வைக்கோலும் வைத்து பெட் தயாரிக்க வேண்டும். சரியாக 21வது நாளில் காளான் வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராகிவிடும். அதன்பிறகு 31வது நாள் இரண்டாவது அறுவடை, 41வது நாள் 3வது அறுவடை என ஒரு பெட்டில் 3 முறை அறுவடை செய்யலாம். 21வது நாளில் ஒரு பெட்டில் இருந்து 350 கிராம் காளான் கிடைக்கும். இரண்டாவது முறை 100 கிராம், 3வது முறை 50 கிராம் கிடைக்கும். சீதோஷ்ண நிலை சரியாக இருக்கும் பட்சத்தில் காளானின் உற்பத்தி அதிகரித்து ஒரு பெட்டில் இருந்து 750 கிராம் காளான் கிடைக்கும். ஒரு பெட் 3 கிலோ முதல் 3.100 கிலோ கிராம் வரை எடை இருக்கும். காளான் அறுவடை செய்து முடித்தபிறகு அந்த பெட் 1 கிலோ எடையாக குறைந்துவிடும்.
300 பெட் அமைப்பதற்கு விதை, வைக்கோல் செலவு என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகும். நான் உற்பத்தி செய்யும் காளான்களை சூப்பர் மார்க்கெட்டில் பாக்கெட் போட்டு கொடுத்துவிடுவேன். வீட்டில் வந்து வாங்கினாலும் விலைக்கு கொடுப்பேன். 200 கிராம் காளான் ரூ.65க்கு விற்பனை செய்கிறேன். 300 பெட் மூலம் ரூ.36 ஆயிரத்திற்கு விற்பனை செய்யும் அளவிற்கு காளான் கிடைக்கிறது. சில நேரங்களில் வருமானம் கூடும், சில நேரங்களில் சிறிது குறையும். காளான் விதைகளையும் ஒரு கிலோ ரூ.165 என விற்கிறேன். இயற்கை அங்காடிகளில் அதை விற்பனைக்காக கொடுக்கிறேன். காளான் வளர்க்க விரும்புகிறவர்கள் எளிதாக அங்கு வாங்கிக்கொள்ளலாம்.
எனது கணவர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை பார்க்கிறார். விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு கிடைக்கும்போது எனக்கு அவர் உதவியாக இருப்பார். குமரி மாவட்டத்தில் காளான் தேவை அதிகரித்தபடி உள்ளது. ஆனால் உற்பத்தி என்பது குறைவாகவே உள்ளது. இதனால் இங்குள்ளவர்கள் தாராளமாக காளான் வளர்ப்பில் ஈடுபடலாம். காளான் வளர்க்க விரும்புகிறவர்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பு தொடர்பாக இங்கு பயிற்சி மேற்கொள்ள வருகிறார்கள். அவர்களிடம் கட்டணம் வாங்காமல் பயிற்சி அளிக்கிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ெஜஸ்மி: 96007 63452.
ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படியே ெஜஸ்மிக்கு காளான் வளர்ப்பு ஷெட் அமைக்க தோட்டக்கலை மானியம் வழங்கியது. அவர் வேளாண் படிப்பை முடித்துள்ளதால் வேளாண் துறை சார்பிலும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுபோல வேளாண்மை படிப்பை முடித்த மாணவ மாணவிகளும், பொதுமக்களும் வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபடும்போது ஒன்றிய, மாநில அரசுகள் பல சலுகைகளை வழங்குகின்றன.
மண்புழு உரம் தயாரிப்பு
காளான் பெட் முதலில் 3 கிலோ எடை இருக்கும். அறுவடை முடிந்த பிறகு ஒரு கிலோவாக எடை குறையும். அந்த பெட்டில் உள்ள வைக்கோல் கழிவுகளை வெளியே கொட்டாமல் அதனை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்து வருகிறார் ஜெஸ்மி. மொத்தமாக மண்புழு உரம் கேட்பவர்களுக்கு கிலோ ரூ.13க்கு விற்பனை செய்கிறார். ஒரு கிலோ, இரண்டு கிலோ என கேட்பவர்களுக்கு ரூ.20க்கு விற்பனை செய்கிறார்.
80 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்
காளான் உற்பத்தி செய்வதற்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை இருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நீடித்து வரும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத காலகட்டத்தில் மட்டும் அதிக வெப்பம் இருக்கும். பெட்களை சுற்றி 26 டிகிரி செல்சியசிற்கு மேல் வெப்ப நிலை இருக்க கூடாது. அதுபோல் பெட் வைக்கப்பட்டுள்ள இடத்தில் காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாக இருக்க வேண்டும். இப்படி இருந்தால் காளான் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஈரப்பதம், வெப்பநிலையை கண்காணித்து வந்தால் காளான் உற்பத்தி அதிகரிக்கும் என்றார்.
