ஜோலார்பேட்டை: வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது வெண்கலத்தால் ஆன முருகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை அன்னசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி ருக்குமணி. இவர்கள் வீட்டருகே உள்ள நிலத்தில் வீடு கட்டுவதற்காக நேற்று முன்தினம் கட்டிட தொழிலாளர்கள் மூலம் அஸ்திவாரம் போட பள்ளம் தோண்டினர். சிறிது ஆழம் தோண்டியபோது அரை அடி உயர வெண்கலத்தால் ஆன முருகர் சிலை இருப்பதை கண்டு ருக்குமணி மற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்த அப்பகுதியினர் ஏராளமானோர் வந்து முருகர் சிலையை தரிசனம் செய்தனர். மேலும் சிலர் கற்பூரம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வணங்கினர். தகவலறிந்த தாசில்தார் காஞ்சனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதையடுத்து போலீசார், ருக்குமணியிடம் இருந்த முருகர் சிலையை மீட்டு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இந்த சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னர்தான் முழு விவரம் தெரியவரும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


