Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசின் 50வது தலைமை செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: தமிழக அரசின் 50வது தலைமை செயலாளராக முதல்வரின் முதன்மை செயலாளர்களில் ஒருவராக பதவி வகித்து வந்த என்.முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக வெ.இறையன்பு பதவி வகித்து வந்த நிலையில், அவர் ஓய்வு பெற்ற போது, கடந்த ஆண்டு சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இவர் தமிழகத்தின் 49வது தலைமை செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கட்டிடங்கள், மனைப்பிரிவு திட்டங்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டு, முதல் தலைவராக 2019ம் ஆண்டு முன்னாள் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 10ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று, புதிய தலைமை செயலாளருக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளராக பதவி வகித்து வரும் என்.முருகானந்தம், தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமை செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.

புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகானந்தம், தமிழகத்தின் 50வது தலைமை செயலாளர் ஆவார். சென்னையை சேர்ந்த இவர் 1991ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்தவர். ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று நேரடியாக பணிக்கு வந்தவர். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை படித்துள்ளார். இவர் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். திருநெல்வேலி சாராட்சியராக பணியை தொடங்கிய முருகானந்தம், தொழில்துறை முதன்மை செயலாளராக இருந்தார்.புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து பெற்றார். புதிய தலைமை செயலாளர் முருகானந்தத்துக்கு, ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வரின் இணைச்செயலராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதி நியமனம்

முதல்வரின் இணைச்செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஜி.லட்சுமிபதி மாற்றப்பட்டு, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்படுகிறார். பொது நூலக இயக்குநராக பணியாற்றி வந்த கே.இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.