Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா உற்சாகம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம், பரமக்குடி, தொண்டி உள்ளியிட்ட மாவட்டத்தில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வேல்,பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமி நாதர் சுவாமி மற்றம் ராமநாதபுரம் வழிவிடு முருகர் கோயில் மூலவருக்கு நேற்று அதிகாலை முதல் மஞ்சள், பால் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பிறகு பக்தர்கள் நேர்த்திக் கடனாக கொண்டு வந்த பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அழகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதுபோன்று தேவிப்பட்டினம் அருகே உள்ள பெருவயல் சிவசுப்ரமணியர் என்ற ரணபலி முருகர் கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுரை முருகர் மற்றும் சிறப்பு வாய்ந்த முருகர் உருவம் பதித்த சத்ரு சம்ஹார வேலிற்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.

ராமநாதபுரம் குமரையாகோயில் முருகர், பிரப்பன்வலசையிலுள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலுள்ள மயூராநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.

குயவன்குடி குமரகுருபர சுப்ரமணியர், திருப்புல்லானி அருகே மேதலோடையில் பால தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலாடி அருகே உள்ள மறவர் கரிசல்குளத்தில் வில்வநாதர் கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கிராமமக்கள் அரியநாச்சியம்மன் கோயில் இருந்து பால்குடம் எடுத்துச்சென்று வில்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிப்ப்ட்டனர்.

முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்கொடுமலூர் குமரன், கடலாடி தேவர் மண்டபம் சுப்ரமணியர், கடலாடி தண்ணீர் பந்தல் முருகன், முதுகுளத்தூர் சுப்ரமணியர், வழிவிடு முருகன், சாயல்குடி வழிவிடு முருகன் கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் அமைந்துள்ள சக்திக்குமரன் செந்தில் ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. நேற்று, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் சண்முகருக்கு செந்தில் ஆண்டவன் மிதிவண்டி பயணக் குழுவின் சேது அணியினர் தங்களின் காணிக்கையாக சிறப்பு திருமஞ்சனம் குட நன்னீராட்டு செய்து வழிபட்டு செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் செந்தில் ஆண்டவர் வெற்றித்திருமகன் ஜெயந்திநாதர் இந்திர விமானத்தில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். பரமக்குடி ஐந்து முனைச்சாலையில் உள்ள முருகன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொண்டி அருகே உள்ள நம்புதாளை கடற்கரை பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது.இதையடுத்து கோயிலிருந்து சாமி வீதி உலா படையாச்சி தெரு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் அன்னபூரணி சமேத நம்பு ஈஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லியம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விழாவின் கடைசி நாளான நேற்று இந்த சிவாலயத்தின் உள்ளே மேற்கு பகுதியில் அமைந்துள்ள முருகப்பெருமானுக்கு, அபிஷேகம் செய்யும் வகையில் பால்குட உற்சவ திருவிழா நடைபெற்றது.

இதில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து தேரோடும் நான்கு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சுற்றி ஊர்வலமாகச் சென்று தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

அதன்பிறகு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்த பாலால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச சேர்ந்த பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.