தஞ்சை: இடப்பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் கடப்பாரையால் தாக்கி வாலிபரை கொலை செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் வேட்டமங்கலம் தெற்கு வீதியை சேர்ந்தவர் பாலையா. இவரது மகன் வெற்றிவேல்(30). இவரது சித்தப்பா அழகர்(50). அருகருகே வசித்து வரும் இரு குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக பொதுவழி, கழிவறை கட்டுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு இடப்பிரச்னை தொடர்பாக அழகருக்கும், வெற்றிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர் மற்றும் அவரது மகன்கள் விக்னேஷ், சந்துரு ஆகியோர் வெற்றிவேலை கடப்பாரையால் தாக்கினர். இதை தடுத்த வெற்றிவேலின் மைத்துனர் சுரேசும் தாக்கப்பட்டார்.
இதில் காயமடைந்த வெற்றிவேல், சுரேசை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து வெற்றிவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த சுரேஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அழகர், சந்துருவை கைது செய்தனர். தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.