Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு நடந்த பாஜக பேரணியில் தடியடி, கல்வீச்சு: 5 போலீஸ் படுகாயம்

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு கொல்கத்தாவில் நடந்த பாஜக பேரணியில் தடியடி, கல்வீச்சு நடந்தது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்த இளம் பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் பாஜக மூத்த தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில், மாநில தலைமைச் செயலகத்தை நோக்கிய மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் பேரணிக்கு தடை விதிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், சட்டப்படி தடை உத்தரவுகளைப் பிறப்பித்து நிலைமையைக் கையாளும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. தொடர்ந்து, சத்ராகாஞ்சி மற்றும் ராணி ராஷ்மோனி சாலை ஆகிய இரண்டு இடங்களை போராட்டத்திற்கான இடங்களாக காவல்துறை அறிவித்தது. மேலும், போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் நோக்கி முன்னேறுவதைத் தடுக்க, நகரின் முக்கிய இடங்களில் இரும்புத் தடுப்புகளை சங்கிலிகளால் பிணைத்து வெல்டிங் பற்றவைத்தும், சரக்குப் மூட்டைகளை வைத்தும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நேற்று மதியம் 2 மணிக்கு மேல் தொடங்கிய பேரணியானது, காவல்துறை அனுமதித்த இடத்தில் கூடாமல், ஜவஹர்லால் நேரு சாலையில் பேரணியாகச் சென்றது. அங்கு குறைந்த அளவிலேயே தடுப்புகளும், அதிகாரிகளும் இருந்த நிலையில், கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீற முயன்றனர். அப்போது, காவல்துறையினர் மீது செங்கற்களை வீசியும், கொடிக் கம்புகளால் தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த மோதலில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தலையில் காயமடைந்தார். மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்த நிலையில், மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை இவர் மீது 6 எப்ஐஆர் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.