ஜூனியரை கொலை செய்த வழக்கு.. மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் சுஷில் குமார். இவர் கடந்த 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். அதன்பிறகு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் டெல்லி சத்ரசல் ஸ்டேடியத்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஹரியானா மாநிம் ரோடாக்கை சேர்ந்த 23 வயது நிரம்பிய மல்யுத்த வீரர் சாகர் தன்கர் கொலை செய்யப்பட்டார். அவரை சுஷில் குமார் தரப்பினர் கடுமையாக தாக்கியதாகவும், பெருமூளையில் ஏற்பட்ட பாதிப்பால் சாகர் தன்கர் இறந்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, டெல்லி காவல்துறையினர் சுஷில் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சாகர் ராணாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், முன்னதாக இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தபோது சுஷில் குமார் முக்கிய சாட்சியை மிரட்டியதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுஷில் குமாரின் ஜாமீனை அதிரடியாக ரத்து செய்தனர். மேலும் ஒருவாரத்தில் போலீசில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் சுஷில் குமார் மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.