மறைந்த ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் 92வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
சென்னை: மறைந்த ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்தநாளையொட்டி தர்மபுரியில் அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று மிகச்சிறப்பாக பணியாற்றியவருமான முரசொலி மாறனின் 92வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தர்மபுரி அதியமான்கோட்டை அவ்வைவழி ஜங்சன் அருகில் முரசொலிமாறன் பிறந்தநாளையொட்டி அங்கு அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பெரியகருப்பன், எ.வ வேலு, ராஜேந்திரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் முரசொலி மாறன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தாயகம் கவி, தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளர் சுபேர்கான், பகுதி செயலாளர்கள் மா.பா.அன்புதுரை, மதன்மோகன், வினோத் வேலாயுதம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பொன்னேரி அன்புவாணன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சேப்பாக்கம் வி.பி.மணி, தலைமைக் கழக பேச்சாளர் வி.பி பிரபாகரன், வழக்கறிஞர் பிரசன்னா, பரிதி இளம் சுருதி மற்றும் ஏராளமானோர் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல தமிழகம் முழுவதும் கட்சி அலுவலகங்களில் முரசொலி மாறனின் திருஉருவப்படத்திற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.