மூணாறு அரசு கல்லூரியில் சம்பவம்; காப்பி அடித்ததை பிடித்ததால் 5 மாணவிகள் பலாத்கார புகார்: பேராசிரியரை விடுவித்த நீதிமன்றம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொருளாதாரத் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன். கடந்த 2014ம் ஆண்டு இந்தக் கல்லூரியில் பல்கலைக்கழக 2வது பருவத்தேர்வு நடைபெற்றது. அப்போது எம்ஏ தேர்வு எழுதிய 5 மாணவிகள் காப்பி அடித்ததை பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து இதுகுறித்து பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய தேர்வு மைய அதிகாரியிடம் ஆனந்த் விஸ்வநாதன் கூறியிருந்தார். ஆனால் பிடிபட்ட மாணவிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதால் காப்பி அடித்தது குறித்து பல்கலைக்கழகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் தங்களை தேர்வு அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 5 மாணவிகளும் மகளிர் ஆணையம் மற்றும் அப்போதைய கேரள கல்வித்துறை அமைச்சரிடம் புகார் செய்தனர். தொடர்ந்து இந்தப் புகார் மூணாறு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது மூணாறு போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேவிகுளம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதனுக்கு 3 வருடம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து இவர் தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி லைஜுமோள் ஷெரீப், பேராசிரியர் ஆனந்த் விஸ்வநாதன் மீது மாணவிகள் பொய்யான புகார் கொடுத்துள்ளனர் என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: பேராசிரியர் மீது மாணவிகள் கொடுத்த புகாரின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. பாலியல் புகாரில் பேராசிரியரை சிக்கவைத்து அவரை பழிவாங்க முயற்சி நடந்துள்ளது. இதற்கு கல்லூரி முதல்வரும் உறுதுணையாக இருந்துள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உத்தரவில் போலீசுக்கும், புகார் கொடுத்த மாணவிகளுக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.