Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மூணாறு அருகே தொடர் மழையால் ஆர்ப்பரித்து கொட்டும் ஸ்ரீநாராயணபுரம் அருவி: குவியும் சுற்றுலாப் பயணிகள்; செல்பி எடுத்து உற்சாகம்

மூணாறு: மூணாறு அருகே, தொடர் மழையால் ஸ்ரீநாராயணபுரம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தினசரி குவியும் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்தும், போட்டோ எடுத்து உற்சாகம் அடைகின்றனர். கேரளாவில் உள்ள இடுக்கி நீர்வளமும், நிலவளமும் நிறைந்த மாவட்டமாகும். இங்கு ஏலக்காய், மிளகு, காப்பி உள்ளிட்ட பணப்பயிர்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தின் எல்லையோர மாவட்டமாக திகழும் இம்மாவட்டத்தில் பசுமைப் பள்ளத்தாக்குகளும், மலைவீழ் அருவிகளும் அதிகளவில் உள்ளன. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடந்து பெய்து வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைக்கட்டுகள், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் 500 நீர்வீழ்ச்சிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்கி விட்டாலே மலை முகடுகளை தொட்டுத் தழுவும் மேகக் கூட்டங்களும், துணைக்கு சாரலை அழைத்து வரும் சில்லென்ற குளிர்காற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும். மழைக்காலங்களில் புதிதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகளை காண அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவி மூணாறில் இருந்து ஆனச்சால் செல்லும் வழியில் 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநாராயணபுரம் அருவி அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியின் அழகிய காட்சியை கண்டு ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். தற்போது தினசரி சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து சென்றதாகவும் கூறுகின்றனர்.

இந்த சீசனில் மட்டும் ரூ.8 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அருவியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.25 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.