Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூணாறு பகுதியில் மீண்டும், மீண்டும் மிரட்டும் படையப்பா காட்டு யானை

Munnar, Padayappa elephantமூணாறு : மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.முன் காலங்களில் காட்டு யானைகள் சுற்றித்திரிந்தாலும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வந்து தொந்தரவு செய்வதில்லை.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது தொழிலாளர்களின் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது.

அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மாட்டுப்பட்டி சாலையில் உள்ள தேவிகுளம் ஊராட்சி அலுவலகம் முன்பு கம்பீரமாக நடந்து சென்றது.

திடீரென சாலையில் படையப்பா யானை நடந்து வருவதைக் கண்டு வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு யானையைக் காட்டிற்குள் விரட்டினர்.