மம்மிக்கு துரோகம் செய்தவர்களிடம் நெருக்கம் காட்டும் இலை தலைவர் மீது நிர்வாகிகள் கொந்தளிப்பில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘பல்பு டீலிங்ல பர்சன்டேஜ் பெரிய தொகை கைமாறியிருக்குறதா பேசிக்கிறாங்களே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி ஒன்றியத்துல, ஊராட்சிகள்ல வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள்னு அடுக்கடுக்காக வளர்ச்சி திட்டப் பணிகள்ல பிரச்னைகள் வர ஆரம்பிச்சுட்டதாம்.. இதுக்கு காரணம், கடந்த சில மாசத்துக்கு முன்னாடி ஒரு அதிகாரி, பணியில சேர்ந்தாராம்.. இவரு பணியில சேர்ந்த உடனே, ஸ்ரிட்டா ஒரு ஆர்டர் போட்டுட்டாராம்.. அது என்னன்னா? எனக்கு முப்பது பர்சன்டேஜ் வந்துடணும்னு போட்ட ஆர்டர் மேட்டராம்.. பர்சன்டேஜ் வாங்கிக்கிட்டுத்தான் பில் பிராசசே நடக்குமாம்.. சம்திங் கையில வந்துடுச்சுன்னா, அப்புறமா, வேலை விறுவிறுன்னு நடக்குமாம்.. அதுமட்டுமில்லாம, பட்டு நகரில் மையப் பகுதியில இருக்குற ஒரு கடைக்காரர் கிட்ட பல்பு டீல் பேசி கமிஷன் கைமாறியிருக்குதாக சொல்லிக்குறாங்க.. தரமற்ற பொருட்களை அதிக விலைக்கு வாங்கி நூதன முறையில் மோசடி தொடங்கிடுச்சாம்.. மொத்தமாக பல்பு டீலிங்ல 10 எல் வரைக்கும் கை மாறியிருக்குறதாக புகார் சொல்றாங்க.. அதோடு முகாம் செலவுக்கும் செக்ரட்ரிகள் கிட்ட வசூல் நடந்திருக்குறதாக சொல்றாங்க.. இதுதொடர்பா உயர் அதிகாரிங்க உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கணும்னு புகார் குரல்கள் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தனிப்பிரிவு போலீசாரை கண்காணிக்க இன்னொரு பிரிவு தொடங்க வேண்டி நிலை இருக்காமே எங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் தமிழக -கர்நாடக எல்லைப்பகுதிகள் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், மதுபானங்களும் எந்த தடையும் இல்லாம பாதுகாப்பாக கடத்தி வரப்படுவதாக புகார் எழுந்திருக்கு.. இதனால் மஞ்சள் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் ஜரூராக விற்பனை நடந்து வருதாம்.. கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் பற்றிய தகவல் எல்லாம் தனிப்பிரிவு போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிந்திருந்தும் கண்டுகொள்வதில்லையாம்.. இதற்காக தக்க சன்மானம் கிடைத்துவிடுவதாக சொல்றாங்க.. இதேபோல, ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அரிசிக்கு, கர்நாடகாவில் நல்ல விலை கிடைப்பதால், மஞ்சள் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் மலைப்பகுதிகள் வழியாக ரேஷன் அரிசி கடத்திச்செல்லப்படுகிறதாம்.. இதற்கும் தனிப்பிரிவு போலீசார் துணை போவதாகவும், மாவட்டத்தை கண்காணிக்க கூடிய உயர் அதிகாரியும் தனிப்பிரிவு போலீசாரை கண்டுகொள்வதில்லையாம்.. அவர்கள் அளிக்கும் தகவல்களில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதே கிடையாதாம்.. கண்ணை மூடிக்கொண்டு நம்பி விடுவதால் தனிப்பிரிவு போலீசாரை கண்காணிக்கவே இன்னொரு தனிப்பிரிவு தொடங்க வேண்டிய நிலை மஞ்சள் மாவட்டத்துல ஏற்பட்டிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பீர், மதுபான விலை அதிரடியாக உயர்த்தப்பட இருக்கும் அறிவிப்பால அதிர்ச்சியில் இருக்காங்களாமே மதுபிரியர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன யூனியனில் மது விற்பனை கொடிகட்டி பறக்குதாம்.. இதனால் புதிய ஆலை தொடங்க அனுமதி கேட்டு புல்லட்சாமி தரப்பு மாவட்ட நிர்வாகிக்கு பைல் அனுப்பியதாம்.. கிடுக்கிப்பிடி கேள்விகளை துளைத்து பைலை பெண்டிங் போட்டதால் டென்ஷனாகி மலராத கட்சியின் மேலிடத்திடம் முறையிட்டாராம்.. அதன் பிறகும் பிரச்னை முடிந்த பாடில்லையாம்.. நிலைமை இப்படியிருக்க 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த மதுவுக்கான உரிம கட்டணத்தை உயர்த்தி அரசாணை வெளியானதாம்.. இதேபோல் அனைத்து வகை உரிமம், கட்டணங்களும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாம்.. இதேபோல் ஏற்றுமதி, இறக்குமதி கலால் வரியும் திருத்தி அமைக்கப்பட்டதாம்.. புத்தாண்டு காலங்களில் மதுபானம் விற்க சிறப்பு அனுமதி கட்டணத்தையும் உயர்த்தி இருக்காங்களாம்.. இதன் எதிரொலியாக, அடுத்த கட்டமாக பீர், மதுபான விலை யூனியனில் அதிரடியாக உயர்த்தப்பட இருக்காம்.. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற அரசு வட்டார தகவலால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்களாம்.. இதுபற்றிதான் ஊர் முழுக்க பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மம்மிக்கு எதிரானவரை கொஞ்சுவதாக இலைக்கட்சி தலைவர் மேல் ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்ப காண்டா இருக்காங்களாமே எதற்கு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மம்மிக்கு துரோகம் செய்தவர்களை அணைத்துக் கொள்வதில் தற்போதைய இலைக்கட்சி தலைவர் ஆர்வம் காட்டுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளிப்பில் இருக்காங்களாம்.. குறிப்பாக, முட்டை மாவட்டத்தை சேர்ந்த நெய் மணக்கும் ஊரைச் சேர்ந்தவர்தானாம்.. தற்போது அவர் மலராத கட்சியின் மாநில நிர்வாகியாக இருக்காராம்.. இவர் சமீபகாலமாக இலைக்கட்சி தலைவரோடு நெருங்கி பழகி வருவதாக இலைக்கட்சிக்காரங்க சொல்றாங்க... மம்மி உயிரோடு இருந்தவரை அவர் மீது ரொம்பவே கோபமாகத்தான் இருந்தாங்க.. அப்படிப்பட்டவரோடு இலைக்கட்சி தலைவர் கொஞ்சி குலாவுவதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது.. இவருக்காக ராசிபுரம் தொகுதியை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிச்சியிருப்பதா பேசிக்கிறாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவருக்கு பெரும் நெருக்கடி கொடுத்த மாஜி போலீஸ்காரருக்கு இவர் ரொம்பவே நெருக்கமானவராக இருந்தாரு.. இதனால்தான் அவருக்கு மாநில அளவில் பொறுப்பு கிடைச்சது.. ஆனால் அவரது பதவி பறிக்கப்பட்ட பிறகு, இலைக்கட்சி தலைவரோடு நெருங்கி பழகிகிட்டு இருப்பதாகவும் சொல்றாங்க.. மம்மி என்றாலே இலைக்கட்சி தலைவருக்கு பிடிப்பதே இல்லை எனவும், உண்மையான மம்மியின் விசுவாசியாக இருந்தால் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் மம்மியின் கல்லறைக்கு சென்று ஆசிவாங்கணும்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ ஆண்டுக்கு ரெண்டுமுறை மட்டும் தான் போறாரு.. மம்மி என ஒருவர் இருந்தையே மறந்துவிட்டு, மம்மியின் கட்சி மட்டும் வேண்டுமா என சின்னமம்மியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பிக்கிட்டு இருக்காங்க.. இதே நிலை நீடித்தால் சரியான பதிலடி கொடுப்போமுன்னும் உறுமுறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.