மும்பை: மும்பையில் பெய்த கனமழையால் விக்ரோலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் அருகிலுள்ள ராய்கட் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. கனமழையால் சயான், பாந்த்ரா, அந்தேரி, செம்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாகின. அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விக்ரோலி பார்க் சைட் மலையோரப் பகுதியில் இருந்த குடிசை மீது பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்தன.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை மீட்டனர். அவர்கள் உடனடியாக ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் மிஸ்ரா (50), அவரது மகள் ஷாலு மிஸ்ரா (19) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த சுரேஷின் மனைவி ஆர்த்தி மிஸ்ரா (45) மற்றும் மகன் ருதுராஜ் மிஸ்ரா (20) ஆகிய இருவரும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.