மும்பை: மும்பையில் கனமழை காரணமாக மோனோ ரயில்களில் சிக்கித் தவித்த 800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பையில் 4-வது நாளாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, பால்கர், ராய்கட், ரத்னகிரி உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இடுப்பளவுக்கு மழை தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை வடலாவில் இருந்து செம்பூர் நோக்கி கொட்டும் மழையிலும் சென்ற மோனோ ரயில் திடீரென அந்தரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நின்றது. மும்பையில் மின்தடை காரணமாக 2 மோனோ ரயில்கள் நடுவழியில் நின்றன. மும்பை மைசூர் காலனி, பக்தி பூங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே கனமழையால் மோனோ ரயில் சிக்கிக் கொண்டது. இதனால் பயணிகள் அலறித் துடித்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு கதறி அழுதனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஜன்னல்களை உடைத்து பயணிகளை காப்பாற்றினர். ஒரு மணி நேரமாக மோனோ ரயில் சிக்கித் தவித்த 500 பயணிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மும்பையில் மற்றொரு இடத்தில் மழையில் சிக்கிக் கொண்ட மோனோ ரயிலில் இருந்து 300 பயணிகள் மீட்கப்பட்டனர்.