Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மும்பையில் 2வது நாளாக 30 செமீ கொட்டித் தீர்த்தது மகாராஷ்டிராவில் மழைக்கு 12 பேர் பலி: 14 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம்

மும்பை: மும்பையில் 2வது நாளாக கனமழை தொடர்ந்ததால் நகரமே வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மராத்வாடா மண்டலத்திலும் கனமழை பாதிப்புக்கு 9 பேர் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் 17 செ.மீ.க்கு மேல் மழை பெய்தது.

பல இடங்கள் வெள்ளக்காடாகின. பஸ், ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. சுரங்கப்பாதைகள் மூழ்கியதால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விமான சேவையும் பாதிக்கப்பட்டது. நேற்று ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், காலையில் இருந்தே மழை கொட்டித் தீர்த்தது. 2வது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால் மும்பையில் பல இடங்களில் அதே நேரத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டது.

மும்பைக்கு செல்லும் 8 விமானங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சில விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டது. இடைவிடாது மழை தொடர்ந்ததால் பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டது. தனியார் ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டனர். அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்லுமாறு பொதுமக்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது.

மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், அனைத்து இடங்களிலும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர். மும்பை மட்டுமல்லாது தானே, புனே மற்றும் மராத்வாடா மண்டலத்திலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மராத்வாடாவில் மழை பாதிப்புக்கு 9 பேர் பலியாகினர். மும்பையில் நேபியன் கடல் சாலையில் சுற்றுச்சுவர் இடிந்ததில் 2 பேரும், காஞ்சூர்மார்க்கில் மின்சாரம் தாக்கி ஒருவரும், மித்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 14 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி தேசமடைந்துள்ளன என முதல்வர் பட்நவிஸ் கூறியுள்ளார்.

மும்பையை பொறுத்தவரை 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது, புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. நிலைமை கட்டுக்குள் உள்ளது. மித்தி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மும்பையில் மோனோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. வடாலா ரயில் நிலையம் அருகே மோனோ ரயில் பாதியில் நின்றதால் அதில் சிக்கிய 200 பேர் மீட்கப்பட்டனர். இதுபோல் மைசூர் காலனி ஸ்டேஷன் அருகே ரயிலில் சிக்கித் தவித்த 442 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.