மும்பை தாக்குதல் விவகாரம் அமெரிக்காவின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் அரசு பணிந்தது ஏன்? சோனியா, ராகுல்காந்திக்கு பா.ஜ கேள்வி
புதுடெல்லி: மும்பை தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பணிந்தது ஏன் என்று சோனியா, ராகுல்காந்திக்கு பா.ஜ கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மறைந்த மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்து வந்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக அண்மையில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், “மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தன. அப்போது அமெரிக்க வௌியுறவு அமைச்சராக இருந்த காண்டலிசா ரைஸ் டெல்லிக்கு வந்து பிரதமரையும், என்னையும் சந்தித்து, தயவுசெய்து பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டாம் என கேட்டு கொண்டார்.
இதுபோன்ற அழுத்தங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் முடிவு கைவிடப்பட்டது” என தெரிவித்திருந்தார். ப.சிதம்பரம் கூறியதை மேற்கோள்காட்டி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் ஆட்சி அடிபணிந்து விட்டது என பாஜ கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “2008 நவம்பர் 26 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, வாஷிங்டனில் இருந்து வரும் வழிகாட்டுதலுக்காக காத்திருந்தார். இதுகுறித்து சோனியா, ராகுல்காந்தி தௌிவுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.