மும்பையில் 17 சிறுவர்களை சிறைபிடித்த பேராசிரியர் சுட்டுக் கொலை: மிரட்டல் வீடியோ வெளியிட்டவரை என்கவுன்டர் செய்தது போலீஸ்; பிணை கைதிகள் பத்திரமாக மீட்பு
மும்பை: மும்பை பவாய் பகுதியில் உள்ள மகாவீர் கிளாசிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஆர்ஏ ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இங்கு வெப் சீரீஸ் ஒன்றில் நடிப்பதற்காக 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக வந்திருந்த 17 சிறுவர்கள் உட்பட 19 பேரை ஆடிஷனுக்கு வரவழைத்த ரோகித் ஆர்யா என்பவர், அவர்களை பிணைக் கைதிகளாக அடைத்து வைத்தார். பின்னர், இது தொடர்பாக ரோகித் ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் ஆர்யா கூறியதாவது: நான் ரோகித் ஆர்யா. தற்கொலை செய்வதற்குப் பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்துள்ளேன். அதற்காக சில குழந்தைகளை இங்கே பிடித்து வைத்திருக்கிறேன். நான் சிலரிடம் பேசியாக வேண்டும். என் கேள்விகளுக்கு பதில் வேண்டும். வேறு எதுவும் வேண்டாம். நான் ஒரு பயங்கரவாதியும் இல்லை, எனக்கு பணத் தேவையும் இல்லை. அதற்காக, நான் இந்த குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளேன். இந்தக் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாவிட்டால் மட்டுமே அது நடக்கும். ஏனென்றால் உங்கள் தரப்பில் இருந்து வரும் சிறிய தவறான நடவடிக்கையும் என்னைத் தூண்டிவிடும். இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார். இந்த சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.
இதுகுறித்து மும்பை போலீசுக்கு நேற்று மதியம் 1.45 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிரடிப்படை, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்ற பவாய் போலீசார், சிறுவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஆர்யாவுடன் பேச்சு நடத்த முற்பட்டனர். ஆனால், ஆர்யா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, அந்த கட்டிடத்தில் இருந்த குளியலறை வழியாக சில 8 போலீஸ் கமெண்டோ வீரர்கள், ஸ்டூடியோவுக்குள் நுழைந்தனர். இதனால் திகைத்துப்போன ஆர்யா தனது கையில் இருந்த துப்பாக்கியால் போலீசை நோக்கி சுட்டுள்ளார். பதிலுக்கு அவர் மீது கமெண்டோ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் காயமடைந்தார்.
பின்னர் அங்கு பிணை கைதிகளாக இருந்த அனைவரையும் மீட்ட போலீசார், ஆர்யாவை ஆம்புலன்ஸ் உதவியுடன் ஜோகேஷ்வரியில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், ஆடிஷன் நடந்த இடத்தில் இருந்து ஏர்கன் மற்றும் சில ரசாயன பொருட்களையும் போலீசார் மீட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஆர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ரோகித் ஆர்யா நாக்பூரைச் சேர்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்துள்ளார். தற்போது செம்பூரில் வசித்து வந்தார். ஆர்யா தனது சொந்த செலவில் நாக்பூரில் ஒரு தூய்மை கணக்கெடுப்பை மேற்கொண்டார். அதில் ரூ.70 லட்சம் வரை செலவானதாக தெரிகிறது. இதற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர், ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அதனை வழங்கவில்லைஎன்று தெரியவந்தது.
 
  
  
  
   
