*வாகனம் வாங்குவதற்கும் புது கட்டுப்பாடு வருகிறது
மும்பை : புதிய வாகனங்களால் மும்பை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து பிரச்னை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நெரிசல் வரி மற்றும் வாகனங்கள் வாங்க புது கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை நகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், பார்க்கிங் வசதிகள் இல்லாததால் வாகனங்களை சிலர் சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இது போக்குவரத்து பிரச்னையை மேலும் அதிகரிப்பதாக அமைந்து விடுகிறது.
இதுதவிர நகரின் முக்கிய பகுதிகளான பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், நாரிமன் பாயிண்ட், வோர்லி மற்றும் லோயர் பரேல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுவதாக ேபாக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: பாந்த்ரா குர்லா, நாரிமன் பாயிண்ட் உட்பட மேற்கண்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள சில வளாகங்களுக்குஏராளமான வாகனங்கள் வருகின்றன. இவற்றுக்கு லண்டன், நியூயார்க்கில் உள்ளது போன்று நுழைவு கட்டணம் அல்லது நெரிசல் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி புதிய வாகனங்களை வாங்குவோர், அதனை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது என்பதற்கான சான்றினை சமர்ப்பிப்பது கட்டாயமாக அமல்படுத்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு குடும்பத்துக்கு ஒரு வாகனம் என்ற கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்தும் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேற்கண்ட விஷயங்கள் குறித்து மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றினை போக்குவரத்துத் துறை அனுப்பியுள்ளதாகவும், அது அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நெரிசல் வரி அல்லது கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அமல்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: நெரிசல் வரி அல்லது கட்டண வசூலிப்பு மூலம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பார்க்கிங் பிரச்னையை வேண்டுமானால் தவிர்க்கலாம். ஆனால், வணிக பகுதிகளில் இது சாத்தியமானதல்ல. ஏனெனில், 1990 க்கு முன்பு மும்பை நகரில் கட்டப்பட்ட பெரும்பாலான வணிக கட்டிடங்களில் பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சாலைகளில் தான் வாகனங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சாைலயில் வாகனங்களை நிறுத்த மும்ைப மாநகராட்சி தடை விதித்தது. ஆனால் இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் சிலர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை தடை செய்தால், நகரில் வாகன எண்ணிக்கை கணிசமாக குறையும். அதேநேரத்தில், பார்க்கிங் இருந்தால்தான் வாகனம் வாங்க முடியும் என்ற கட்டாயத்தை அரசு கொண்டு வந்தால், போலியான சான்றிதழ்கள் அதிகரிக்க வாய்ப்புகளும் உள்ளன என்றனர். இதனிடையே, முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் போக்குவரத்து துறையின் பரிந்துரையை பரிசீலித்ததாகவும், இன்னும் ஒரு மாதத்துக்கு இது குறித்து பல்ேவறு தரப்பிலும் கருத்துக்கள் கேட்டு அதன்பிறகு நெரிசல் வரி விதிப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அளவில் 6வது இடம்
மும்பை நகரில் வாகன நெரிசல் அதிகமாகி வருவதால், பயண நேரமும் அதிகரிக்கிறது. இதுதொடர்பாக சர்வதேச அளவிலான போக்குவரத்து வேகம் குறித்த ஆய்வில், மும்பை நகரில் கடந்த 2024ம் ஆண்டில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 29.26 நிமிடங்கள் ஆனது தெரிய வந்துள்ளது.
இதற்கு முந்தைய ஆண்டு இதே தூரத்தை கடக்க 21.20 நிமிடங்கள் மட்டுமே ஆனது. இதன்மூலம் சர்வதேச அளவில் 39வது இடத்தை இந்த நகரம் பிடித்துள்ளது. தேசிய அளவில் சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூருவுக்கு அடுத்ததாக 5வது இடத்தில் புனேயும், 5வது இடத்தில் மும்பை நகரமும் உள்ளன. மும்பை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 2,300 வாகனங்கள் என்ற அளவுக்கு வாகன நெரிசல் உள்ளது.
இதன் காரணமாக தெற்கு மும்பையில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ், லோயர் பரேல், ஒர்லி, தாதர், சயான், குர்லா - காட்கோபர்- செம்பூர் மற்றும் ஜூகு - அந்தேரி தடத்தில் நெரிசல் நேரத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்து போதுமானதாக இல்லை : மக்கள் குற்றச்சாட்டு
மும்பை நகர சாலைகளில் வாகன நெரிசலை குறைக்க வேண்டுமானால் அதற்கு வலுவான பொது போக்குவரத்து வசதிகள் அவசியம். மும்பை நகரத்தில் பொது போக்குவரத்து போதுமானதாக இல்லை. இதனால் தான் மக்கள் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாகனங்களை வாங்குவதற்கு பார்க்கிங் கட்டாயம் என்ற நிபந்தனையை அரசு கொண்டு வந்தால், அதற்கு ஏற்ப பொது போக்குவரத்தை அனைத்து பகுதிகளுக்கும் சாத்தியமாக்குவதற்கான உத்தரவாதத்தை அரசு தர வேண்டும்.
நகரம் முழுவதும் விரிவான பொது போக்குவரத்து இருந்தால், மக்கள் தனியார் வாகனங்களை ஏன் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? என்றார். ஆனால் இது குறித்து விளக்கம் அளித்த போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வர், இந்த ஆண்டு புதிய மெட்ரோ பாதைகள் மற்றும் கூடுதல் மின்சார ஏசி பேருந்துகள் உள்ளிட்ட வசதிகளால், நகரத்தில் பொது போக்குவரத்து கட்டமைப்புகள் வலுவடைந்து வருகின்றன, என்றார்.
மும்பை துறைமுகம் அருகே பார்க்கிங் வசதி
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: நகரில் வாகனங்களுக்கு நெரிசல் வரி விதிக்கப்படும் திட்டம் ஒரு புறம் இருக்க, மும்பை துறைமுகம் அருகே உள்ள பகுதிகளில் பெரிய அளவில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நெரிசல் நேரங்களில் தெற்கு மும்பைக்குள் கார்கள் நுழைவதை கட்டுப்படுத்தலாம். இதன்மூலம் வாகனம் வைத்திருப்போர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயமாகி விடும். இதனை சாத்தியமாக்க பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், என்றார்.
வெளிநாடுகளை போன்ற நடைமுறை
ஜப்பானில் புதிய கார் வாங்குவதற்கு முன்பு, கார் கேரேஜ் உள்ளது என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம். இதுபோல், சிங்கப்பூரில் கார் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் 1990ம் ஆண்டு மே மாதத்தில் அமல்படுத்தப்பட்டது. லண்டனில் 39 சதுர கிலோமீட்டருக்கு 15 பவுண்டு (₹1,578) நெரிசல் வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் வாகன எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 35 சதுர கிலோமீட்டருக்கு வரி விதிக்கப்படுகிறது.