Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கருப்பூரில் 18.06 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது ரூ.20 கோடியில் நவீன வசதியுடன் பல்நோக்கு விளையாட்டரங்கம்

அதிகாரிகள் தகவல்

இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

சேலம் : சேலம் கருப்பூரில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குதல், போட்டியில் பங்கேற்க நிதியுதவி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குதல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மாநகரின் மையப்பகுதியில் அண்ணா பூங்கா அருகில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, போல்வால்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி பெறும் வகையில் வசதிகள் உள்ளது. இதில் ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் காந்தி ஸ்டேடியத்திற்கு மாற்றாக, பெரிய அளவில் போதுமான இடவசதிகளுடன், சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அருகில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காணொலி வாயிலாக, ரூ.20 கோடி மதிப்பில் சேலம் கருப்பூர் பல்நோக்கு விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கட்டிட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது விளையாட்டரங்கில் 400மீ ஓடுதளம், கைப்பந்து, ஸ்கேட்டிங், டென்னிஸ், கோகோ, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, ஹாக்கி, உடற்பயிற்சி கூடம், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட கட்டிட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைந்து செயல்பாட்டிற்கு வர உள்ளது.

இதுகுறித்து விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அருகில், 18.06 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் நிர்வாக கட்டிடம், உள்விளையாட்டு அரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் விளையாட்டினை பார்வையிடும் வகையில் கேலரி, 400மீ ஓட்டப்பந்தயத்திற்கு தேவையான ஓடுதளம், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், கோ-கோ, டென்னிஸ், ஸ்கேட்டிங், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஜிம்னாஸ்டிக், நீச்சல் குளம், ஹாக்கி, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.

அதேபோல், வாலிபால் மற்றும் பேட்மிட்டன் போட்டிக்கு தனியாக இன்டோர் கோர்ட் மற்றும் விளையாட்டு விடுதியும் அமைய உள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நிறைவடைந்த பிறகு, விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.