Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முகப்பேர் பகுதியில் ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா சோதனை: அரசு டாக்டர் மீது வழக்குபதிவு

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தனியார் ஸ்கேன் சென்டர் உள்ளது. இங்கு மாலை நேரத்தில் மட்டும் கர்ப்பிணிகள் அதிகளவில் வந்து சென்றுள்ளதால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்கேன் சென்டரில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சோதனை நடத்தி தெரிவித்து வந்துள்ளது தெரிந்தது. இதற்காக அதிக பணம் வசூலித்துவந்துள்ளனர்.

இதுசம்பந்தமாக தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவ இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நேற்றிரவு அரசு மருத்துவ இயக்குனர் மீனாட்சிசுந்தரி தலைமையில், மருத்துவ குழுவினர் ஸ்கேன் சென்டருக்கு சென்று அங்கு காத்திருந்த கர்ப்பிணிகளிடம் நைசாக விசாரித்தபோது கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்வதற்காக வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மீனாட்சிசுந்தரி ஸ்கேன் சென்டர் உள்ளே சென்று டாக்டரிடம் விசாரித்துள்ளார். அப்போது டாக்டர், ‘’சத்தியமாக கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று யாரிடமும் சொல்லவில்லை. உங்களுக்கு யாரோ பொய்யான தகவல் கொடுத்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் கொடுத்த பெண்ணை வரவழைத்து விசாரித்தபோது நடந்தது பற்றி டாக்டர் ஒப்புக்கொண்டார்.

இதுசம்பந்தமாக அரசு மருத்துவ குழு கொடுத்துள்ள புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஸ்கேன் சென்டர் நடத்திவரும் டாக்டர் பகவதி வரதராஜனிடம் விசாரிக்கின்றனர். கடந்த 2 வருடங்களாக நடத்திவருகிறார். சென்னை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராகவும் உள்ளார். கருவில் இருப்பது ஆனா, பெண்ணா என்று சொல்வதற்கு அதிக பணம் வசூல் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் பகவதி வரதராஜன், உதவியாளர் அன்னாள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது ஸ்கேன் சென்டர் பூட்டப்பட்டுள்ளது.