Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எம்எஸ்எம்இ சட்டத்தால் ஜவுளிகளை திருப்பி அனுப்பும் வியாபாரிகள்; 3 மடங்கு வட்டியுடன் ஐடி வசூல் குமுறும் ஜவுளி உற்பத்தியாளர்கள்: முடங்கும் மூலதனம்; தவிக்கும் தொழிலாளர்கள்

இந்தியாவில் ஜவுளி உற்பத்தி என்பது பிரதான தொழிலாக உள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி நடத்தும் பாஜ அரசு, ஜவுளித்தொழில் மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அதே நேரத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரிச்சட்டம், ஜவுளித்தொழிலை மேலும் முடக்கி விட்டது என்கின்றனர் ஜவுளி உற்பத்தியாளர்கள்.

ஜவுளி உற்பத்தியாளர்களை பொறுத்தவரை, தொழில் போட்டியின் காரணமாக, வியாபாரிகளுக்கு 30 நாட்கள் முதல், 3 மாதங்கள் வரை கடனுக்கு விற்பனை செய்து வருவது, ஜவுளித்தொழிலில் வாடிக்கையாக இருந்து வந்தது. சரக்கு விற்பனையாகாத பல வியாபாரிகள், மேலும் பல நாட்கள் கழிந்தே, தொகை அனுப்புவது வாடிக்கை. இந்நிலையில், ஒன்றிய வருமான வரித்துறை எம்எஸ்எம்இ (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன மேம்பாட்டு சட்டம்) என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி பதிவு பெற்ற உற்பத்தியாளருக்கு, வியாபாரிகள் 45 நாட்களுக்குள், அதற்கான தொகையினை செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் கொள்முதல் செய்து பணம் செலுத்தாத சரக்கை சொத்தாக கருதி, அதற்கான வருமான வரியினை அரசுக்கு செலுத்த வேண்டும். 45 நாட்கள் கடந்து உற்பத்தியாளருக்கு தொகை செலுத்தினால், அந்த தொகை செலவினமாக கருதப்பட மாட்டாது. இந்த வரியை செலுத்தாவிட்டால், மூன்று மடங்கு வட்டியினை அபராதமாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த சட்டத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஒன்றிய அரசும், வருமான வரித்துறையும் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, ஜவுளி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் எம்எஸ்எம்இ சட்டத்திற்கு ஏற்ப, தங்கள் நடைமுறையை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த புதிய சட்டம் 2024ல் அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டாலும், கடந்த 2023ல் இருந்தே ஓசைப்படாமல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சட்டத்திற்கேற்ப கணக்குகளை நடைமுறைபடுத்தும் நிலைக்கு, ஜவுளி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் தற்போது மாறி வருகின்றனர்.

இந்நிலையில், உற்பத்தியாளர்களிடம் வாங்கப்பட்ட ஜவுளிகள் விற்கவில்லை. தேக்கமடைந்துள்ள துணிகளுக்கு 45 நாட்களில் பணம் செலுத்த முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் ஜவுளி உற்பத்தி நகரமான குமாரபாளையத்தில் இருந்து, உற்பத்தியாளர்கள் அனுப்பிய ஜவுளி மூட்டைகளை வியாபாரிகள் திருப்பி அனுப்பி வருவது, தேர்தல் நேரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலக்கமானது வரப்போகும் நாடாளுமன்றத் ேதர்தலில், பாஜ அரசு மீது கடும் அதிருப்தியாக வெளிப்படும் என்கின்றனர் ஜவுளித்தொழில் வல்லுநர்கள்

இதுகுறித்து குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்-விற்பனையாளர் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: விற்காத ஜவுளிகளை குடோனில் இருப்பு வைத்துக்கொண்டு, அதற்கான தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் வியாபாரிகள். இதனால் அதற்கான வருமான வரியை செலுத்துவதில், நடைமுறை சிக்கல் ஏற்படும் என்று கருதுகின்றனர். இதனால் கடந்த மாதம் இறுதியில், வாங்கிய ஜவுளிகளுக்கு பணம் செலுத்தாமல், அவற்றை மீண்டும் உற்பத்தியாளர்களுக்கே ரிட்டன் பில் போட்டு அனுப்பி வருகின்றனர். இது ஜவுளி உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விற்ற சரக்கை திரும்பி அனுப்புவதால் ஏற்படும் போக்குவரத்து செலவு, ஜிஎஸ்டி போன்றவற்றை கருத்தில் கொண்ட உற்பத்தியாளர்கள், வாங்கிய சரக்கு விற்பனையாளரிடமே இருக்கட்டும். அதற்கான ரிட்டர்ன் பில்லை மட்டும் அனுப்புங்கள் என்று கேட்டு வருகின்றனர். ஆனாலும், இடவசதி, பராமரிப்பு செலவு, பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொள்ளும் வியாபாரிகள் வாங்கிய சரக்கை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஜவுளிகள் தேங்கியுள்ள நிலையில், ரிட்டர்ன் வரும் ஜவுளிகளையும் சேர்த்து வைப்பதால், மூலதன முடக்கமும், இடவசதியும் இல்லாமல் பல ஜவுளி உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர். இந்த புதிய வருமான வரிச்சட்டம், தேவையற்ற நடைமுறை சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற அவலங்கள் ஏற்படும் என்று தான், ஒன்றிய அரசின் புதிய வருமான வரிச்சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் என்று கேட்டோம். குறிப்பாக எம்எஸ்எம்இ சட்டத்தில் உள்ள 45 நாட்கள் வரம்பை தளர்த்தி, 90 நாட்கள் வரையென்று அமல்படுத்த கோரிக்கை வைத்தோம். ஆனால் பாஜ அரசு இதற்கு செவிசாய்க்க வில்லை. ஜவுளிகள் ரிட்டன் வருவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என்று அனைவரும், ஒன்றிய அரசின் சட்டத்தால் பாதித்துள்ளனர். கடும் அதிருப்தியில் அவர்கள் ஆழ்ந்துள்ளது நிச்சயம் வரப்போகும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.