Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்பிக்கள் ரகசிய ஓட்டுப்பதிவு: துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன், பி.சுதர்சன் ரெட்டி போட்டி

புதுடெல்லி: துணை ஜனாதிபதி பதவிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. எம்பிக்கள் ரகசிய முறையில் ஓட்டு போடுகிறார்கள். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற துணைஜனாதிபதி தேர்தலில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளைப் பெற்றார்.  இன்று நடைபெற உள்ள 17வது துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்த பாஜ மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கட்சிக் கொறடாவின் உத்தரவு பொருந்தாது என்பதாலும், தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாதவையாக மாறிவிடக் கூடாது என்பதிலும், மாற்றி வாக்களிப்பதைத் தடுப்பதிலும் ஆளுங்கட்சி தரப்பும், எதிர்கட்சி தரப்பும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ‘நாடாளுமன்ற பயிலரங்கம்’ என்ற பெயரில் இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்து ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிகளுக்கு விளக்குவதற்காக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. எதிர்கட்சிகளின் 315 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் (மக்களவை 234, மாநிலங்களவை 81) மாதிரி வாக்குப்பதிவுப் பயிற்சி வழங்கப்பட்டது.

இதன் மூலம், ரகசிய வாக்கெடுப்பில் வாக்குகள் சிதறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முழுமையான ஆதரவு தங்களுக்கு இருப்பதாக ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். துணைஜனாதிபதி தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 781 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 427 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அதன் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இருப்பினும், ரகசிய வாக்கெடுப்பு என்பதால், இறுதி முடிவுகள் எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்கக் கூடும் என்ற விறுவிறுப்பு நிலவுகிறது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவையின் பொதுச் செயலாளருமான பி.சி. மோடி தெரிவித்தார்.

* பிஆர்எஸ், பிஜூ ஜனதா தளம் புறக்கணிப்பு

ஒடிசாவின் பிரதான எதிர்க்கட்சியும், முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியும் துணை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

* துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தலில் 788 எம்பிக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

* இதில் மாநிலங்களவை எம்பிக்கள் 245 பேர் மற்றும் மக்களவை எம்பிக்கள் 543 பேர்.

* மாநிலங்களவையின் நியமன எம்பிக்கள் 12 பேரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.

* மாநிலங்களவையில் 6 இடங்களும், மக்களவையில் ஒரு இடமும் காலியாக இருப்பதால் 781 எம்பிக்கள் ஓட்டு போட தகுதியானவர்கள்.

பலம் என்ன?

* துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 781 எம்பிக்கள் இன்று ஓட்டு போட உள்ளனர்.

* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 427 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

* இந்தியா கூட்டணிக்கு 315 எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

* 25 சட்ட வல்லுநர்கள் சுதர்சன்ரெட்டிக்கு எதிர்ப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை சந்தித்ததற்காக இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை 25 சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். அதில் பீகார் மாநிலத்தின் பொது நிதி ரூ.940 கோடி மோசடி செய்யப்பட்ட கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவை, பி. சுதர்சன் ரெட்டி சமீபத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்தது வருத்தமளிக்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் உட்பட 25 சட்ட வல்லுநர்கள் கொண்ட குழு ஒரு கூட்டு அறிக்கையில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.