போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில்,மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான உமாங் சிங்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் 30 நாள்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மிகவும் குறுகிய காலஅவகாசத்தில் இவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான செயல்முறை எப்படி சாத்தியமாகும்? இது வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இல்லை. மாறாக, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை குறைத்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும்.
குறிப்பாக மத்தியபிரதேச மக்கள் தொகையில் பழங்குடியினர் 22 சதவீதம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொலைதூர பகுதிகளில் குறைந்த டிஜிட்டல் ஆவணங்களுடன் வசிக்கின்றனர். இந்த சூழலில் எந்த தவறும் செய்யாத லட்சக்கணக்கான பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக 50 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமைகளை பறிக்க பாஜ சதி செய்து வருகிறது” என்றார்.
