ரயில் மாறி ஏறியதால் ஏற்பட்ட சோக முடிவு: ம.பி. போலீஸ் சித்ரவதையால் நெல்லையை சேர்ந்தவர் இறந்ததாக புகார்!
நெல்லை: நெல்லை மாவட்டம் சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசனமுத்து (44). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு புனே சென்றுள்ளார். அங்கு அவர் இட்லி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் 20 நாட்களுக்கு பின் மீண்டும் சொந்த ஊர் திரும்புவதற்காக மும்பையில் இருந்து ரயிலில் புறப்பட்டுள்ளார். ஆனால், தவறுதலாக பாட்னா விரைவு ரயிலில் ஏறியதால் மத்தியப் பிரதேசத்துக்கு மாசனமுத்து சென்றுள்ளார்.
அங்கு இறங்கிய மாசனமுத்து, மொழி தெரியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து மத்தியப் பிரதேசத்தில் மொழி ஏதும் தெரியாததால் அங்குள்ள போலீசாரின் உதவியை மாசானமுத்து நாடியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தங்கியிருந்த மாசானமுத்துவை சந்தேகத்தின் பேரில் கஞ்ச் பசோடா போலீசார் அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்தில் விசாரணையின் போது மாசானமுத்து உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போலீஸ் தகவல் தெரிவித்தது. உயிரிழந்த மாசானமுத்துவின் உடல் தற்போது மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் போலீசார் அடித்து துன்புறுத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாசானமுத்து என்பவர் உயிரிழந்தாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாசானமுத்து மகன் சுஜின் கூறியதாவது; கஞ்ச் பசோடா போலீசாரால் தனது தந்தை உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதில் உயிரிழந்து விட்டார். தனது தந்தையின் உயிரிழப்புக்கு கஞ்ச் பசோடா போலீஸ் பொறுப்பேற்க வேண்டும். தந்தை மாசானமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாசானமுத்து உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.