திரைப்பட புகழை வைத்துக்கொண்டு அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார் விஜய்: அதிமுக தாக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த தளிஅள்ளி கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே தான் நேரடி போட்டிகள் இருந்து வந்தது. இவ்வாறான நிலையில், தமிழகத்தில் புதிய, புதிய கட்சிகளும் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அவர்கள், வெளியே சென்று மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை, ஏதோ சினிமாவில் (விஜய்) நடித்தார்கள், அந்த புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தவெக கூட்டணி வரும் என்று நினைத்து அவருக்கு ஆதரவாக அதிமுக தலைவர்கள் பேசி வந்த நிலையில், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் கூட்டணிக்கு வர மறுத்துவிட்டதால் அவரை விமர்சித்து கே.பி.முனுசாமி பேட்டியளித்து உள்ளார்.

