Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15ஐ தீர்மானித்தது ஏன்?

விடுதலை பெற்ற இந்தியாவாக இன்று சுதந்திர காற்றை நாம் சுவாசிக்கும் நம் தேசத்தை ராணி இரண்டாம் எலிசபெத்தின் தந்தையான கிங் ஜார்ஜ் VI, நாடு முழுவதுமான குடியரசுக் கட்சி அரசியலமைப்பிற்கு மாற்றப்படும் வரை ஆட்சிசெய்தார். இன்று ‘தேசத்தின் தந்தை’ என்று இன்றளவும் நம்மால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் தலைமையின்கீழ் பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் இருந்து விடுதலை பெற இந்தியா கடுமையாகப் போராடியது. இந்தியா 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்நிய ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று நாட்டு மக்கள் தீவிரமாக விரும்பினர். 1857ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் சட்டத்திற்கு எதிராக முதல் கிளர்ச்சி நடந்தது. பின்னர், இந்தியாவின் சுதந்திரத்திற்கான பிரச்சாரம் இந்திய க்கலகம், 1857ன் கிளர்ச்சி, பெரும் கிளர்ச்சி மற்றும் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்பது உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்டது. டெல்லிக்கு வடகிழக்கே 40 மைல் (64 கிமீ) தொலைவில் உள்ள காரிஸன் நகரமான மீரட்டில் ராணுவத்தின் சிப்பாய்களின் கலகம் வடிவில் 10 மே 1857ல் கிளர்ச்சி தொடங்கியது. அதேபோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பங்கு மிக முக்கியமானது.

அவரைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் முழு மூச்சாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு ஆதிக்க அந்தஸ்து மட்டும் வழங்க விரும்பினர். ஆனால், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு மற்றும் தேஜ் பகதூர்சப்ரு ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்தியர்கள் குழு முழுமையான சுதந்திர இந்தியாவையே விரும்பினர்.தேசத் தலைவர்களின் தொடர் போராட்டங்களால் 1929ம் ஆண்டு இர்வின் பிரபுவுக்கும் இந்தியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுதோறும் தன் பொதுக்கூட்டத்தை டிசம்பர் மாதத்தில் நடத்திவந்தது. அதேபோல் அந்த ஆண்டு நடைபெற்ற லாகூர் அமர்வில் முந்தைய ஆதிக்க நிலையிலிருந்து விலகி, முழு சுதந்திரத்திற்கான ‘பூர்ண ஸ்வராஜ்’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல வருடப் போராட்டத்தின் உச்சகட்டமாக இந்தியர்கள் ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தினர். இதன் விளைவாக இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்திடம் ஜூன் 30, 1948க்குள் அதிகாரத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்டதன் விளைவாக உண்டான வன்முறையையும் ரத்தம் சிந்துதலையும் தவிர்க்க விரும்பினார். எனவே, 1948 ஜனவரி 30 வரை காத்திருக்காமல் முன்னதாகவே இந்தியாவுக்கான அதிகார மாற்றத்தை நிறைவேற்றிவிட முடிவெடுத்தார். இதையடுத்து மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15ஐ இந்திய சுதந்திர நாளாகத் தேர்ந்தெடுத்தார். ஃப்ரீடம் அட் மிட்நைட் எனும் புத்தகத்தில் இதை மேற்கோளாகக் காட்டியிருப்பார். மவுண்ட்பேட்டனின் இந்த முடிவிற்குப் பிறகு, பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஜூலை 4, 1947ல் இந்திய சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்று பிரிட்டனை உள்ளடக்கிய நேசநாடுகளிடம் சரணடைவதாக 1945 ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானியப் பேரரசர் ஹிரோஹிட்டோ அறிவித்திருந்தார். அதை நினைவுகூரும் விதமாகவே அந்தத் தேதியை மவுண்ட்பேட்டன் அறிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டு தனித்தனி ஆதிக்கங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இரு நாட்டுத் தலைவர்களிடமும் விடுதலைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்திய சுதந்திரச் சட்டத்தின்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும்.ஜூலை 1948ல், பாகிஸ்தான் தனது முதல் நினைவு தபால் தலைகளை வெளியிட்டது. அதில்கூட ஆகஸ்ட் 15, 1947ஐ அதன் சுதந்திர தினமாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், தேதி பின்னர் ஆகஸ்ட் 14 என மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கான காரணங்கள் தெளிவாக இல்லை. நள்ளிரவில் வழங்கியதால் பெறப்பட்ட நேரத்தை வைத்து இந்த வேற்றுமை அமைந்ததாகக் கூறப்படுகிறது.