‘‘கலால் காக்கிகள் நடவடிக்கை சரியில்லாததால, கூண்டோடு தூக்கி அடிச்சிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல, ஆந்திர மாநிலத்துல இருந்து கடத்தி வரப்படும் சரக்குகளை, கலால் காக்கிகள் உரிய முறையில சோதனை செய்றதே இல்லைன்னு, மாவட்ட உயர் காக்கிகளுக்கு சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் சென்றிருக்குது.. இந்த புகார் எதிரொலியாக, கலால் காக்கிகள் நடவடிக்கையை உயர் காக்கிகள் ரகசியமாக, கண்காணிச்சு வந்திருக்காங்க.. இந்த கண்காணிப்புல, கலால் காக்கிகளோட, நடவடிக்கை திருப்தி இல்லையாம்..
இந்த ரிப்போர்ட் சென்னை வரைக்கும் போயிருக்குது.. அப்புறம், கலால் காக்கிகள் பிரிவில் பணியாற்றி வந்த ஸ்டார் காக்கிகள் தொடங்கி, பல காக்கிகளை கூண்டோடு, வேறு காக்கிகள் நிலையத்துக்கு அதிரடியா மாற்றம் செஞ்சிட்டாங்க.. இப்ப அந்த பிரிவுக்கு புதிதாக காக்கிகள் நியமிக்கப்பட்டிருக்காங்க.. இந்த சம்பவம் தான் வெயிலூர் காக்கிங்க இடையே பரபரப்பாக பேசப்படுகிறதாம்.. மாவட்ட உயர் காக்கியின் நடவடிக்கையால, ஒட்டுமொத்த காக்கிகள் துறை கொஞ்சம் ஆடிப்போயிருக்குதாம்..
இப்படி ஒவ்வொரு பிரிவாக காக்கிகளை கவனிச்சாத்தான், காக்கிகள் துறை தலைநிமிரும்னு ஜனங்க வேற பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கலெக்டர் அலுவலக பெயரை பயன்படுத்தி சம்பந்தமில்லாத கல்லா கட்டுறாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் சாலைக்கு மேல் தண்ணீர் பாலம் செல்லும் பேரூராட்சியில் செயல் அலுவலர், தலைவர் ஆகியோருக்கும் சில கவுன்சிலர்களுக்கும் மோதல் முற்றி வருகிறதாம்.. குறிப்பாக தூய்மை பணியாளர்களை வைத்து பலமுறை அவதூறு செய்தி பரப்பப்பட்டதா சொல்றாங்க..
கடந்த சில நாட்கள் முன்பு தூய்மை பணியாளர்களை செயல் அலுவலர் திட்டினார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் அதனை தூய்மை பணியாளர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டாங்க.,. அங்கு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றும் பெண் பணியாளர், அங்கு பணியாற்றும் தற்காலிக பணியாளர்களிடம், உங்களுக்கு சம்பளம் ஒழுங்காக வருகிறதா? பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படுகிறதா என விசாரித்தவர், தன்னிடம் கலெக்டர் நேரடியாக இங்கு கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். இடையில் எந்த அதிகாரியும் கிடையாது.
எனவே தைரியமாக என்னிடம் தகவல்களை கூறினால், அதனை கலெக்டரிடம் நேரில் கூறி நடவடிக்கை எடுக்கலாம்.. உங்கள் ஒப்பந்ததாரர்கள் வந்தால், என்னை அழையுங்கள். நான் கலெக்டரிடம் பேசி பிரச்னையை சரி செய்கிறேன்னு சொல்லியிருக்கிறாரு.. தற்போது. அந்த பெண் பணியாளர் பேசுவதையும் வீடியோவாக அங்கு பணியாற்றும் பணியாளர் ஒருவர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளாராம்.. குமரியில் சமீப காலமாக கலெக்டர் அலுவலக பெயரை பயன்படுத்தி சம்பந்தமே இல்லாதவர்கள் கல்லா கட்டுகின்றனறாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யூனியன் காக்கிகளிடம் உள்ளூர்வாசிகளே கொந்தளித்து விட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சுற்றுலா பகுதியான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிமாநில படையெடுப்புகள் அதிகரித்தபடி உள்ளதாம்.. எதையும் கண்டுகொள்ளாத காக்கிளால் இளசுகளின் ஆட்டத்துக்கு அளவே இல்லையாம்.. தாறுமாறாக வண்டிகளை ஓட்டிச் சென்று பைன்களிலும் சிக்கிக் கொள்கிறார்களாம்.. சமீபத்தில் கடல்ஊர் ரோட்டில் காக்கிகள் சோதனை நடத்தி வண்டிகளை மடக்க, போதையில் இருந்த இளசுகளோ சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தார்களாம்..
ரோடும் சரியில்ல, பாலமும் சரியில்ல ஆனா கெடுபிடிக்கு மட்டும் பஞ்சமில்லை என முணுமுணுத்தார்களாம்.. இதெல்லாம் எங்க பிரச்னையே இல்லப்பா என காக்கிகள் கூற, பறிப்பது மட்டும்தான் உங்களது வேலையா, பாதுகாப்பது இல்லையா என நகைத்தபடி ப விட்டமின்களை இறைத்தபடி நகர்ந்தார்களாம்.. அங்கிருந்த உள்ளூர்வாசிகளோ, சுண்ணாம்பு பால விபத்தை சுட்டிக்காட்டி அவங்களை விடுங்க, எங்கள் உயிரை பாருங்க என கொந்தளித்தார்களாம்.. இதுபற்றிதான் யூனியன் காக்கிகளிடத்தில் பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி மலையான தலைவர் செயல்பாட்டுக்கு மலராத கட்சியில் செக் வைத்ததால் ஒரே ஆனந்தத்தில் திளைக்கிறாராமே தேசிய பெண் தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியின் பெண் எம்எல்ஏ செம குஷியில் இருக்காங்களாம்.. தனக்கு இடையூறு செய்து வந்த மாஜி தலைவரோடு இமேஜ் டேமேஜ் ஆனதோடு அவரோடு செயல்பாடுகளுக்கும் செக் வைக்கப்பட்டுவிட்டதால் ஒரே ஆனந்தத்துல இருக்காங்களாம் பெண் தலைவர். சமீப நாட்களாக கட்சி நிகழ்ச்சிகளில் சரிவர பங்கேற்காமல் இருந்து வந்த பெண் தலைவர் கடந்த ஒரு வாரகாலமாக மான்செஸ்டர் நகரில் பம்பரமாக சுற்றி வர்றாராம்..
வெளியூரில் இருந்து வந்து உள்ளூர்ல இருக்கிற என்னையே ஓரங்கட்ட நினைச்சா விட்டுவிடுவேனா, எத்தனை தடைகளை தாண்டி இந்த இடத்திற்கு வந்திருப்பேன். என்கிட்டயே மோதுனா சும்மா இருப்பனா. இன்னும் எலக்சன் நெருங்க, நெருங்க இது மாதிரி நிறைய வெளிவரும்னு தன்னோட ஆதரவாளர்கள் கிட்ட சொல்லி கெத்து காட்டினாங்களாம். தேசிய தலைவியோட இந்த கெத்துக்கு ஒன்றியத்தில் உள்ள பெண் அமைச்சரின் ஆதரவு தான் காரணமாம்.. மாஜி தலைவரோட அத்தனை முறைகேடான சொத்து பட்டியலும் இப்ப பெண் அமைச்சரின் கையில் ரெடியா இருக்காம்..
அதோடு இல்லாம பதவியில் இருந்தப்ப மாஜியின் நிழலாக இருந்து எல்லாத்தையும் கவனித்துக்கொண்ட மாஜியின் தாடிக்கார நண்பர் சமீபத்துல ஒன்றிய பெண் அமைச்சரிடம் அப்ரூவராகி மாஜியின் 4 ஆண்டு பதவி காலத்தில் என்னென்ன நடந்தது என்பதை முழுமையா ஒப்பித்துவிட்டதாகவும் ெசால்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சியுடன் இணைப்பு விவகாரம் பிம்பிலிக்கி பியாப்பி ஆனதால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராமே பலாப்பழக்காரர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பலாப்பழக்காரரின் சொந்த மாவட்டமான ஹனிபீ மாவட்டத்துல அவருக்கு ஆதரவாக கணிசமானோர் இருக்காங்க.. இவர்கள் பலாப்பழக்காரர் பின்னால் சென்றாலும், அவர்களது நோக்கம் அனைவரும் ஒன்றிணைந்த இலைக்கட்சியில் இருக்க வேண்டும் என்பதுதானாம்.. இணைப்பு என்ற பலாப்பழக்காரரின் கோரிக்கை இவர்களுக்கு அவ்வப்போது ஆறுதலை கொடுத்தாலும், கோட்டையானவர் விதித்த கெடு இவர்களுக்கு ரொம்பவே உற்சாகத்தை தந்ததாம்..
ஆனால், இந்த உற்சாகம் ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லையாம்.. இணைப்பு விவகாரத்தில் சேலத்துக்காரர் பிடிவாதமாக இருக்கும் நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று முக்காடு போட்டு திரும்பிய அவர் தந்த பதிலால் கடும் ஷாக் ஆயிட்டாங்களாம்.. எப்படியாவது, இலைக்கட்சி ஒருங்கிணையும் என்ற இவர்களது எண்ணத்தில், இடி விழுந்தது போல, ‘பிரிந்து சென்றவர்களை கூட்டணியில் சேர்க்கலாம்.
ஆனால், இலைக்கட்சியில் சேர்க்க மாட்டோம்’ என சேலத்துக்காரர் கறாராக பேசியதால் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் கடும் மன உளைச்சலில் இருக்காங்களாம்.. இதில் ஒரு பிரிவினர் கெடு விதித்த கோட்டையானவரை சந்திக்க வேறு சென்றனராம்.. சிலர் சேலத்துக்காரர் - பலாப்பழக்காரர் இருவரும் கைகுலுக்குவது போன்ற பிளக்சை வேறு வைத்திருந்தாங்க.. கடைசியில் இணைப்பு விவகாரம் பிம்பிலிக்கி பியாப்பி என ஆனதால் பலாப்பழக்காரரே கடும் அதிருப்தியில் உள்ளாராம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.