சென்னை: தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 21 வகையான மாற்றுத்திறனாளிகளில் 40% மற்றும் அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டம் மலைப்பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படுகிறது. மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டணப் பேருந்துகளில் 35 கிலோ மீட்டர் வரையிலும் மற்றும் பேருந்து வசதியில்லாத பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரையிலும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதற்காக, போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக வழங்கிட ஒரு பயனாளிக்கு ரூ.22 வீதம் ஓராண்டிற்கு ஏற்படும் உத்தேச செலவினத் தொகை வழங்கி ஆணையிடப்படுகிறது. இந்த ஒப்பளிக்கப்பட்ட செலவினத் தொகையினை 2025-26ம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டிற்குள்ளாகவே செலவினம் மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement