Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மலைச்சாலையில் பஸ்சை வழிமறித்த காட்டுயானை

*கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைச்சாலையில் அரசு பஸ்சை காட்டுயானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. மேலும் மலைச்சாலைகளில் காட்டுயானைகள் அவ்வப்போது கூட்டமாக வலம் வந்து சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை மறிக்கும் சம்பவங்களும் நடப்பது வழக்கம்.

இந்நிலையில், கொடைக்கானல் கீழ்மலை பள்ளத்து கால்வாய் பிரதான மலைச்சாலையில் நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதிக்குள் இருந்து திடீரென வெளியே வந்த ஒற்றை காட்டுயானை அரசு பஸ்சை வழிமறித்தது.

இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து, பஸ் சடன் பிரேக் அடித்து நிறுத்திய டிரைவர், சுதாரித்து சிறிதுதூரம் ரிவர்ஸில் பஸ்சை இயக்கினார். சாலையில் வழிமறித்து நின்ற யானை அதே இடத்தில் இருந்தபடி சிறிதுநேரம் போக்கு காட்டி விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

அதன்பின்பே பஸ்சில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து டிரைவர் பஸ்சை இயக்கினார். பிரதான மலைச்சாலைகளில் உலா வரும் காட்டுயானைகள், காட்டுமாடுகள் போன்ற வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.