குன்னூர் : குன்னூர் மலைப்பாதையில் சாலையோரத்தில் விபத்து அபாயமுள்ள பாறை, கற்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கழிவுநீர் கால்வாய், பாதாள சாக்கடை, தடுப்பு சுவர் சீரமைப்பு உட்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அபாயகரமான இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்படும் இடங்களில் ஆபத்தான முறையில் உள்ள பாறைகள் அகற்றப்பட்டு, சாலையை விரிவாக்கம் செய்து தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் ஆபத்தான முறையில் மலைப்பாதையில் தொங்கிய பாறைகள் அகற்றப்பட்டு சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளன.
புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட மண் குவியல்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பாறை கற்களையும், மண் குவியல்களையும் உடனடியாக அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

