நெல்லை: நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர். முத்தையாவிற்கும் மனைவி முத்துலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலை முத்தையா வீட்டிற்கு கறி வாங்கி வந்து கொடுத்து குழம்பு வைக்குமாறு கூறியுள்ளார். அதற்கு முத்துலட்சுமி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்தையா, மனைவி மற்றும் மகள்களை அவர்களது தாய் ஊரான கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளத்தில் கொண்டுபோய் விட்டு விட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாமியார் வீட்டிற்கு வந்த முத்தையா, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி, நேற்று காலை, இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால் தாய் லட்சுமி (65) தேடிச் சென்றுள்ளார். அப்போது காட்டுப் பகுதியில் உள்ள கிணற்றில் உள்ள தண்ணீரில் பேத்திகள் உடல் மிதப்பதைக் கண்டு கதறினார். தகவலறிந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து, கிணற்றில் இறங்கி 3 பேர் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து முத்தையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.