சேலம்: சேலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டத்தை தொடங்கியுள்ளது, விஜயகாந்திற்கு கிடைத்த வெற்றி. தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். அப்போது இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என மற்ற அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதனை செயல்படுத்திய அரசுக்கும், முதல்வருக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகவே தேர்தல் ஆணையம் மீது நாங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நியாயமாக இல்லை. தேர்தல் நேரத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுகிறது. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. என்றார்.