Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வறுமையின் கோரப்பிடியில் 55 வயதில் 17வது குழந்தையை பெற்ற தாய்: மருத்துவமனையில் மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்

உதய்பூர்: ஏற்கனவே 16 பிள்ளைகளைப் பெற்ற 55 வயதுப் பெண் ஒருவர், தனது 17வது குழந்தையைப் பெற்றெடுத்த நிலையில், அந்தக் குடும்பத்தின் வறுமையும், மருத்துவமனையில் அவர்கள் உண்மையை மறைத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த ரேகா கல்பெலியா (55) என்பவருக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஐந்து குழந்தைகள் பிறந்த சிறிது காலத்திலேயே இறந்துவிட்டனர். உயிருடன் உள்ள மற்ற குழந்தைகளில் ஐந்து பேருக்குத் திருமணமாகி, அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். குப்பைகளைப்சேகரித்து வாழ்க்கை நடத்தும் இந்தக் குடும்பம், கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கிறது. குழந்தைகளின் பசியைப் போக்க, 20 சதவீத வட்டிக்குக் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கியதாக ரேகாவின் கணவர் கவ்ரா கல்பெலியா வேதனையுடன் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாங்கிய கடனில் லட்சக்கணக்கான ரூபாயைத் திருப்பிச் செலுத்தியும், வட்டி இன்னும் முடியவில்லை. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டும், நிலம் எங்கள் பெயரில் இல்லாததால் இன்னும் வீடற்றவர்களாகவே நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம்’ என்று அவர் கூறினார். இந்த நிலையில், நேற்று ரேகா தனது 17வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஜாடோல் சமூக சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக ரேகா அனுமதிக்கப்பட்டபோது, இது அவருக்குப் பிறக்கும் நான்காவது குழந்தை என்று அவரது குடும்பத்தினர் மருத்துவரிடம் பொய் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய மகப்பேறு மருத்துவர் ரோஷன் தரங்கி, ‘ரேகாவின் முந்தைய பிரசவங்கள் குறித்து விசாரித்ததில், இந்த பிரசவம் அவருக்கு 17வது குழந்தை என்பது தெரியவந்தது’ என்றார்.

ரேகாவின் மகள் ஷீலா கூறுகையில், ‘எங்கள் தாய்க்கு இவ்வளவு குழந்தைகள் இருப்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் கடும் சிரமங்களைச் சந்திக்கிறோம். உணவு, திருமணம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாமல் ஒவ்வொரு நாளையும் பெரும் போராட்டத்துடன் கடந்து வருகிறோம்’ என்று அந்தக் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்தனர். ஆனால் அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் ரேகா கல்பெலியா - கவ்ரா கல்பெலியா தம்பதி குறித்தும் சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.