வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே காதல் கணவர் இறந்ததால் தன் ஒரு வயது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் குடித்தார். இதில் குழந்தை இறந்தது. தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த முத்தூர், மங்களப்பட்டி, காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (47). காங்கயம் அரசு போக்குவரத்து கிளையில் பஸ் டிரைவர். இவரது மகள் லாவண்யா (25). கடந்த 2 வருடத்திற்கு முன்பு உறவினர் கவுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து ஓராண்டாகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் கவுதம் இறந்தார். இதனால் லாவண்யா மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக இரவில் உறங்குவதற்கு சிரமப்பட்டு தூக்க மாத்திரை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று லாவண்யா வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டியும் திறக்கவில்ைல. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரையுடன் லாவண்யா மற்றும் குழந்தை மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லாவண்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.