திருமலை: வீட்டில் இருந்த தாய், 2 மகள்கள் தடியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவரான டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா சீதாராம காலனியில் வசிப்பவர் பிரசாத். இவரது மனைவி மாதுரி(26). இவர்களது மகள்கள் நிஸ்ஸி (8), பிரிஜி (6). பிரசாத் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் கார் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணிக்குச் சென்ற பிரசாத், பணி முடிந்து நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் தனது மனைவி மாதுரி மற்றும் 2மகள்கள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து பெத்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 3பேரையும் யாரோ மர்ம நபர்கள் தடியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் மாதுரியின் உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்த காயங்கள் இருந்துள்ளன. அதன்பிறகு சடலங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரசாத் மீது சந்தேகம் இருப்பதால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தாய், 2 மகள்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.