Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எங்களை விட்டு போய் 8 வருஷம் ஆகுது... மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்க தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின் தாய் பகீர் குற்றச்சாட்டு

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் உயிரிழந்த பிரித்திக் என்ற சிறுவனின் தாய் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூரில் முகாமிட்டு கடந்த 5ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை குழுவுக்கு தடை கேட்டு தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதே நேரத்தில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரித்திக் (11) என்பவரின் தந்தை பன்னீர்செல்வம் பெயரில், அமன் மாலிக் என்ற வழக்கறிஞர் சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், இந்த வழக்கை தாங்கள் தொடரவில்லை என்றும், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரித்திக்கின் தாய் ஷர்மிளா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரித்திக்கின் தாய் ஷர்மிளா கூறியதாவது: பிரித்திக் எனது மகன்தான். பன்னீர்செல்வம் எனது கணவர்தான். ஆனால் இந்த வழக்கு போட்டது எனக்கு தெரியாது. பணத்துக்காக இந்த மாதிரி செய்கிறார் என தெரிகிறது. பையனுக்காக அவர் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. உயிரிழந்த மகனை பார்க்கவோ, விசாரிக்கவோ இல்லை. அவன் என்ன படிக்கிறான், அவனுக்கு என்ன வயசு, என்ன பிடிக்கும் எதுவுமே அவருக்கு தெரியாது. இத்தனை வருஷம் கழித்து, ஏன் வருகிறார் என தெரியவில்லை. அவர் என்னை விட்டுப் போய் 8 வருடம் ஆகிறது.

பையனை நானும் அம்மா, தம்பியும் தான் பார்த்துக்கிட்டோம். பையனுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பையன் இறந்ததும் சுடுகாட்டுக்கு வந்து பார்த்து விட்டு உடனே சென்று விட்டார். அங்கு நிற்க கூட இல்லை. எங்களை பார்க்கவும் வரவில்லை, யாரையும் பார்க்க வரவில்லை..அப்புறம் ஏன்? கேஸ் போட்டிருக்கிறார் என எதுவும் எனக்கு தெரியவில்லை. வீட்டுக்கும் வரவில்லை, எங்களிடமும் பேசவில்லை. டிவிகேவில் இருந்து பேசினார்கள், அவரோட பெயருக்கு செக் போட சொல்லி பிரஷர் பண்றாங்க... பையன் யாருகிட்ட இருந்தான்னு புரூப் வேணும்... சொல்லி கால் பண்ணி கேட்டிருந்தாங்க.

பன்னீர் செல்வத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாரோட தூண்டுதலின் பேரில் தவெக காரங்களோ அல்லது யாரோ தூண்டுதலின் பேரில் தான் பணத்துக்காக தான் அவர் இப்படி பண்றாரு. இவ்வாறு கூறி கண்ணீர் விட்டார். இதுதொடர்பாக ஷர்மிளாவின் தம்பி சந்துரு கூறுகையில், ‘அவரு வந்து இந்த அளவுக்கு நாலெட்ஜான ஆள் கிடையாது... சுப்ரீம் கோர்ட்ல போயி கம்ப்ளெயிண்ட் பண்ணி, பண்ற அளவுக்கு பினான்சியலாகவும், நாலெட்ஜூம், அறிவும் கிடையாது. வேற எதாவது தூண்டுதலில் கட்சி மூலமா எந்த கட்சின்னும் எங்களுக்கு தெரியல... எங்களுக்கு அந்த பயம் இருக்கு’ என்றார்.

* சாதி பார்த்து விஜய் ஆறுதல் சொன்னாரா? உயிரிழந்தவரின் அண்ணன் அதிர்ச்சி

கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு 11 நாட்களுக்கு பின் விஜய் வீடியோ காலில் ஆறுதல் சொன்னார். இதில் 41 பேரின் குடும்பங்களுக்கு விஜய் ஆறுதல் சொல்லவில்லை என கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதில் விஜய் சாதி பாகுபாடு பார்ப்பதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த கரூர் மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சதீஷ்குமாரின் (25) அண்ணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விஜய் சார் வந்து வீடியோ காலில் இதுவரை 20 பேருக்கிட்ட... 30 பேருக்கிட்ட 15 நிமிடம்... 20 நிமிடம்... பேசினதாக நானும் கேள்விப்பட்டேன். உங்ககிட்ட பேசினாரா?...

ஒன்னுமே தகவலே சொல்லலைன்னு உள்ளூர் பிரமுகர்கள் தெரிஞ்சவங்க சில பேர் என்கிட்ட கேட்டாங்க.. ஆனா, என்னடா... ஏதுடான்னு எனக்கும் தெரியல...ஆனா என்கிட்ட பேசல. ஒரு வேளை நாங்க குறிப்பிட்ட சமூகம்கிறதனால நம்மள ஒதுக்கிறாங்களோன்னு சந்தேகம் ஏற்படுது. இதுக்கும் பார்த்திங்கன்னா என் தம்பி சதீஷ் வந்து விஜய்யோட தீவிரமான ஃபேன். வேலையை முடிச்சிட்டு, கூட்டத்திற்கு விஜய்யை பார்க்கிறதுக்காவே என் தம்பி சதீஷ்குமார் அங்க போயிருக்கிறாரு. அந்த குடும்பத்திற்கு ஒரு நன்றி கடனாவாவது விஜய் பேசியிருக்கலாம். ஒருவேளை சாதி தடுக்குதோ என்னவோ’ என்றார்.