தாயுமானவராகி மாறியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் பொறுப்பேற்றது முதற்கொண்டு அவர் எடுத்து வைத்து இருக்கும் அத்தனை நலத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தாயுமானவர் என்ற பதம் நிச்சயம் அவரை மட்டுமே சாரும். அந்த அளவுக்கு பள்ளி மாணவர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்கள், அரசு ஊழியர், ஆசிரியர்கள், முதியோர் வரை சமூகத்தின் அத்தனை மக்களும் நலம் அடையும் வகையில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைத்து, இந்த 4 ஆண்டுகளிலேயே அவர்கள் பயன்பெறுவதையும் கண் முன்னே கண்டு மகிழ்ந்து தாயுமானவராக மாறியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இப்போது அதன் இன்னொரு கட்டமாக இந்தியாவிலேயே முதன்முறையாக வீடு தேடி சென்று மக்களிடம் ரேஷன் பொருள் கொடுக்கும் தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை நேரில் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், ஒவ்வொரு பயனாளிகளின் வீட்டில் அமர்ந்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் 34,809 ரேஷன் கடைகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் 20 லட்சத்து 42,652 பேரும், மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 பேரும் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடைவார்கள். மாதத்தில் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இது திட்டம் மட்டும் அல்ல, தமிழ்நாடு அரசின் சேவை. அதுவும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டு இருக்கும் பெரும் முயற்சி.
இந்தியாவிலேயே முதல் முயற்சி. பெண்களுக்கு இலவச பஸ் பயண வசதி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை, நகரங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு சார்பிலேயே தோழி விடுதி, இன்னும் திருநங்கைகள் நலனுக்காக பல திட்டங்கள் என்று அர்த்தமுள்ள ஆட்சி நடத்துவது மட்டுமல்ல, இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும் மாறி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அவர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களாலும், இந்த 4 ஆண்டு ஆட்சி காலத்தின் வளர்ச்சியினாலும் தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகி இருக்கிறது. தனி நபர் வருமானம் உயர்ந்து இருக்கிறது. வேலைவாய்ப்பு பெருகி இருக்கிறது. உலகின் முன்னணி நிறுவனங்களின் பார்வை தமிழ்நாட்டை நோக்கி திரும்பியிருக்கிறது. கல்வியில் தமிழ்நாடு தலைசிறந்து நிற்கிறது. மருத்துவ கட்டமைப்புகள் அடியோடு மாற்றியமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
பழைய, பாரம்பரிய மருத்துவமனைகளுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நோக்கியும், மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கியும் வந்து சேரும் காலமாக மாறியிருக்கிறது. கல்வியும், சுகாதாரமும் தமிழ்நாடு அரசின் இரு கண்களாக மாறியிருக்கிறது. அதோடு தொழிற்துறையும் வேகம் எடுத்து இருக்கிறது. 4 ஆண்டிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பை மாற்றி காட்டி இன்று தமிழ்நாட்டின் தாயுமானவராக உயர்ந்து இருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.