ரசாயன இடுபொருட்களைத் தவிர்த்து இயற்கை முறையிலான விவசாயம் செய்ய இன்று பல விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்காக பல்வேறு பராமரிப்பு முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் மூடாக்கு முறை. அதாவது நமது நிலத்தில் இயற்கையாக கிடைக்கும் பொருட்கள் மூலமாக நிலத்தை மூடாக்கு போல மூடி வைத்து பராமரிக்கும் விவசாய முறை. இந்த முறையில் மண்ணை இயற்கை பொருட்களால் நிலத்தை மூடி வைப்பதன் மூலம் ஒரு உயிருள்ள சுற்றுச்சூழலை நாம் நிலத்தில் உருவாக்க முடியும். இது பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்து விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்.
மூடாக்கு விவசாயத்தின் அடிப்படை நோக்கமே மண்ணின் இயற்கை அமைப்பை சிதைக்காமல் பாதுகாத்து, பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கு வதுதான். வழக்கமாக நாம் மண்ணை உழுது, அதில் விதைகளை ஊன்றுகிறோம். அதற்கேற்ப சாணம், உரம், மருந்து, தண்ணீர் ஆகியவற்றை இட்டு பயிர் செய்கிறோம். இந்த முறையில் நாம் மண்ணையே மாற்றி அமைக்கிறோம். ஆனால் மூடாக்கு முறையில் நாம் நிலத்தை உழாமல் அதன் மேல் இயற்கையாக அழுகக்கூடிய இலைதழைகள், மாட்டுச்சாணம், கோமியம், தேங்காய் ஓடுகள், சாம்பல், காய்கறிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை அடுக்கி வைக்கிறோம். இதன்மூலம் மண்ணின் மேற்பரப்பில் சூரிய ஒளி நேரடியாக படாது. இதனால் சரியான அளவில் ஈரப்பதம் இருக்கும். மண்ணில் புழுக்கள், நத்தைகள் உள்ளிட்ட உயிரிகள் பெருகிபன்மயச்சூழல் உருவாகும். இந்த உயிரிகளின் செயல்பாடுகள் மண்ணை உயிர்ப்புடனும், வளத்துடனும் வைத்திருக்கும்.
நாம் ஒரு நிலத்தை மூடி வைக்கும்போது அதன் கீழுள்ள மண் சில வாரங்களில் பக்குவப்படத் தொடங்கும். மூடிய பொருட்கள் மெதுவாக அழுகும். அதன் கீழ் இருக்கும் உயிரணுக்கள் அந்த அழுகிய பொருட்களைக் மண்ணோடு கரைப்பதற்கான வேலையைச் செய்யும். இது காலப்போக்கில் மண்ணை மென்மையானதாக மாற்றிவிடும். நிலத்தை மூடி வைக்கும்போது ஆரம்பத்தில் அங்கே எதுவும் நடக்காதது போலத் தெரியும். ஆனால் 20-30 நாட்கள் கழித்து அந்த மூடிய பொருட்களைத் தூக்கிப் பார்க்கும்போது, மண் மட்டுமல்லாமல் புழுக்கள், நத்தை, மிதமான ஈரத்தன்மை போன்றவை அதிகரிப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். இத்தகைய நிலத்தில் விதை போட வேண்டியதுதான் நம் வேலை. அவ்வாறு விதைக்கப்படும் விதைகள் விரைவாக வளர்ந்து, காயாமல் நின்று, நீடித்த பலன் கொடுக்கும்.
மூடாக்கு முறையைப் பின்பற்றும் விவசாயிகள் பெரிய அளவில் நீர்வளத்தைச் சேமிக்கிறார்கள். இதனால் ஒரு பயிர் வளர்வதற்காக நாம் அளவுக்கு அதிகமாகப் பாசனம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. மழைப்பொழியும் காலத்தில் மூடாக்கு மேலே இருக்கும் பொருட்கள் மண்ணுக்குள் தண்ணீரைப் பாய்ச்சாமல் ஈரப்பதத்தை ஈர்த்து வைத்துக்கொள்ளும். இது பயிர் வளர்ச்சிக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். பூச்சிக்கொல்லிகள், கெமிக்கல் உரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. பூச்சிகள் வந்தாலும் அவை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கும். நிலவேம்பு, தூதுவளை போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்படும் உரங்களும், பாதுகாப்பு மருந்துகளுமே விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும். இதனால் விவசாயச் செலவுகள் கடுமையாகக் குறைவதுடன், மண்ணின் ஆரோக்கியம் சீராகவும் நீடித்தும் இருக்கும்.
இந்த முறை அனைத்து நிலங்களுக்கும் பொருந்தும். வெறும் பண்ணை நிலம் மட்டுமல்ல, வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகளின் பசுமை வெளிகள் ஆகியவற்றிலும் முயற்சி செய்யலாம். சிறு நிலங்கள் வைத்திருப்பவர்கள் கூட மூடாக்கு முறையைப் பயன்படுத்தி தக்காளி, புடலங்காய், முருங்கை, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை இயற்கையாக வளர்க்க முடியும். குறிப்பாக வீட்டு மாடித்தோட்டங்களில் வளர்ப்பவர்கள் கூட கம்போஸ்ட் உரம், சாணம், பசுமை இலைகள் போன்றவற்றை வைக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக மூடாக்கு முறையை பின்பற்றினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். ஒருமுறை நாம் நிலத்தை மூடாக்கினால் மூடினால் போதும். அதில் நாம் அவ்வப்போது கூடுதலான பசுமைப் பொருட்களைச் சேர்த்து வரலாம். பின்பு அந்த நிலம் தாமாகவே உயிர்ச்சுழற்சியை உருவாக்கி தனக்குத் தேவையான சத்துகளை தாமே எடுத்துக்கொள்ளும்.
இந்த முறை தற்போது பல்வேறு விவசாய வல்லுநர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. விவசாயிகள் மட்டுமல்லாமல், பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் இந்த முறையை ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன. பல விவசாயிகளும் இதைத் தங்கள் வயல்களில் செயல் படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஆர்கானிக் விவசாயம், ஆர்கானிக் விவசாயம் என இயற்கை முறையிலான உணவுப்பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்திற்கு மூடாக்கு விவசாயம் ஒரு வரப்பிரசாதம்!