*10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவும் வாய்ப்பு
தியாகராஜ நகர் : நெல்லை அரசு இசை பள்ளியில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெறும் நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.400ல் இருந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
10, 12ம் வகுப்பு தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகலை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் அனுபவமிக்க ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதில் ஆர்வம் மிக்க மாணவ - மாணவிகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. வயது வரம்பு 13 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முழு நேரம் பயில வேண்டும். பயிற்சி கட்டணம் கிடையாது. முதல் ஆண்டு ரூ.350ம் 2 மற்றும் 3ம் ஆண்டுகளில் ரூ,325ம் சிறப்பு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த ஆண்டு முதல் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெறவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெறவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இங்கு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு அரசு அறிவித்துள்ள இலவச பஸ் வசதி, ரயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி வசதி, மாதம் தலா ரூ.1000 கல்வி உதவித்தொகை, இலவச சீருடை, மிதிவண்டி, இலவச காலணி ஆகியவை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.
3 ஆண்டு பயிற்சி முடிப்பவர்களுக்கு தேர்வு இயக்ககத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இசை ஆசிரியர்களாகவும், வல்லுநர்களாகவும் உருவாக வாய்ப்புகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் சான்றிதழ், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.