டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஜாம்பவான் விராட் கோஹ்லி, 4 மாத இடைவெளிக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் சுற்றுப்பயணத்திற்கு செல்ல இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். நியூடெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர், மிக வேகமாக தனது காரில் ஏறி புறப்பட்டார். ரசிகர்கள் சூழ்ந்து வந்த நிலையில், அவர் வேகமாக சென்றார். இந்திய அணியுடன் இணைந்து, ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார்.
கடந்த 4மாதத்திற்கு முன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கான பட்டத்தை வென்றதும், விராட் கோஹ்லி, தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் 2 குழந்தைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுகிறார்.
தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கு கோஹ்லியும், ரோகித்தும் மூத்த வீரர்களாக தேர்வாகியுள்ளனர். வரும் 19ம் தேதி பெர்த் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்குகின்றனர். அடுத்து 23ம் தேதி அடிலெய்டு, 25ல் சிட்னி போட்டிகளிலும் விளையாட இருக்கின்றனர். இந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோஹ்லி கடும் சவாலாக இருப்பார் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.