Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

புதுடெல்லி: ஜூலை 21ம் தேதி தொடங்கி நடந்து வந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று தொடங்கியவுடன் வழக்கம் போல் எதிர்க்கட்சி எம்பிக்கள் பீகாரில் வாக்காளர் திருத்தம் தொடர்பாக போராட்டம் நடத்தினார்கள். கடும் கூச்சம் குழப்பம் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் அவை கூடியவுடன் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்ட மசோதா, 2025 நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் அவை துணை தலைவர் தேதிக்குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார். தனது நிறைவு உரையில் துணை தலைவர் ஹரிவன்ஷ் முழுக்கூட்டத்தொடரும் தொடர்ச்சியான இடையூறுகளால் பாதிக்கப்பட்டது. தலைவர் எவ்வளவு முயற்சித்தும் உறுப்பினர்கள் அர்த்தமுள்ள பிரச்னைகளை எழுப்புவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவை 41மணி நேரம் 15 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது.

இந்த அமர்வின் உற்பத்தி திறன் ஏமாற்றமளிக்கும் வகையில் 38.88சதவீதமாக இருந்தது. உறுப்பினர்கள் 285 கேள்விகள், 285 பூஜ்ய நேர சமர்ப்பிப்புகள் மற்றும் 285 சிறப்பு குறிப்புகளை எழுப்ப வாய்ப்பு கிடைத்தது. இவற்றில் 14 கேள்விகள், 7 பூஜ்ய நேர சமர்ப்பிப்புகள் மற்றும் 61 சிறப்பு குறிப்புகளை மட்டுமே உண்மையில் எடுத்துக்கொள்ள முடிந்தது. ” என்றார்.  இதேபோல் மக்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. காலை தொடங்கிய கூட்டத்தொடர் 11 மணிக்கு பின்னர், மீண்டும் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அவை தொடங்கியதும் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, முழு அமர்விலும் மீண்டும் மீண்டும் அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை தவிர எந்த செயல்பாடும் இல்லை. இந்த அமர்வில் 37 மணி நேரம் கூட அவை அலுவல்கள் நடைபெறவில்லை. திட்டமிடப்பட்ட தொடர் இடையூறுகள் காரணமாக 55 கேள்விகளை மட்டுமே வாய்மொழி பதிலுக்கு எடுத்துக்கொள்ள முடிந்தது” என்றார்.

* ஆன்லைன் கேமிங் மசோதா நிறைவேற்றம்

மாநிலங்களவையில், ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டமசோதா விவாதமின்றி நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறிப்பாக நடுத்தர வர்க்க இளைஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ள அனைத்து ஆன்லைன் பண விளையாட்டுக்களை தடை செய்யும் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

* 100 சதவீத வெற்றி விகிதம்

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, ‘‘அரசு தனது அனைத்து பணிகளையும் முடித்துவிட்டது. கூட்டத்தொடர் 100 சதவீத வெற்றி விகிதத்தை கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் விவாதத்தை அனுமதிக்க மறுத்ததால் கருவூல அமர்வுகள் தங்களது மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேசிய நலனுக்கான அரசு மக்களுக்கு தனது கடமைகளை செய்ய வேண்டும்” என்றார்.

* காங். தலைமையின் பாதுகாப்பின்மை

மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பின்னர் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் வழக்கமான சந்திப்பு நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘முக்கியமான ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதுபோல பல முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாததற்கு வருத்தப்படுகிறேன். எதிர்க்கட்சியில் சில திறமையான இளம் எம்பிக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசினால் கட்சியின் தலைமை பாதுகாப்பாற்றதாக மாறிவிடும் என்பதற்காகவே அமளி செய்து திறமையான இளம் எம்பிக்களை விவாதித்தில் பங்கேற்க முடியாமலேயே போகிறது’’ என்றார்.