Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மழைக்காலத்தில் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு காத்திருப்பு நேரம் 10 நொடிகளாக குறைப்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: மழைக்காலங்களில் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு காத்திருப்பு நேரம் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மயிலாப்பூர் பண்டகசாலையில் தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் மின் தடங்கல் மற்றும் மின்சார பாதுகாப்பு சம்பந்தமான புகார்களை எவ்விதத் தொய்வுமின்றி தெரிவித்திட வழிவகை செய்யும் விதமாக, மின்னகத்தில் கூடுதலாக 10 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால், பொதுமக்கள் மின்சாரம் குறித்து புகார் அளிக்கும் போது, அழைப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். மின்னகத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கான காத்திருப்பு நேரத்தை தற்போதுள்ள 20 நொடிகளில் இருந்து 10 நொடிகளாகக் குறைத்து, எவ்வித அழைப்பும் விடுபடாமல், உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்க அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழை எதிர்க்கொள்ள மின்வாரியம் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பின்வருமாறு:

* 11,435 மின்மாற்றிகள், 3,30,636 மின் கம்பங்கள் மற்றும் 8,515 கி.மீ. மின் கம்பிகள், 1,471 கி. மீ. அளவில் புதைவட கம்பிகள், மற்றும் 3,41,015 மின் அளவிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

* துணை மின் நிலையங்களில் டீசல் ஜெனரேட்டர், நீர் வெளியேற்றும் மின் மோட்டார்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

* அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் சுவிட் ஆப் செய்து வைக்கக்கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவு

பொதுமக்களுக்கான அறிவுரைகள்:

* மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

* சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.

* தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்சார வயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.

* ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

* வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.