பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையையொட்டி, இன்று (27.10.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் அனைத்துத் துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் சென்ட்ரலில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம்;
வடகிழக்கு பருவமழையினையொட்டி மண்டலம் 14 மற்றும் மண்டலம் 15 ஆகிய பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம். நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகம், வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்கின்ற பல்வேறு சேவை துறைகளின் உயரலுவலர்கள் கலந்து கொண்டனர். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை 181 தொடங்கி 201 வரை 20 வார்டுகள் கொண்டிருக்கும் மிகப் பெரிய தொகுதி.
இத்தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்து வருகிறது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய சட்டமன்ற தொகுதியான சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின்போதும் ஆண்டுக்கு 4 முறையாவது வருகை தந்து இத்தொகுதியில் அவர் எடுத்த பிரத்யேக நடவடிக்கை காரணமாக இன்றைக்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் ஏராளமாக கட்டப்பட்டது. நீர்வளத்துறை சார்பில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டது. நாராயணபுரம் ஏரி அதனுடைய உபரிநீரால் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகள் ஆண்டுதோறும் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும்.
இன்று அந்த பகுதிகளிலும் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஐந்து முறைகளுக்கு மேல் வருகை தந்து புதிய இணைப்புக் கால்வாய்கள் கட்டியதன் விளைவு இன்றைக்கு அந்தப் பகுதிகளும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு 20 மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அவரவர்கள் பகுதிகளில் உள்ள பாதிப்புகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சொல்லப்பட்ட இன்னொரு செய்தி, வடகிழக்கு பருவமழை 84 செ.மீ அளவிற்கு ஆண்டுதோறும் பெய்யும். இதுவரை கடந்த 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் இதுவரை பெய்திருக்கும் மழையின் அளவு 24 செ.மீ மட்டுமே. எனவே நான்கில் ஒரு பகுதி மழையினை மட்டுமே நாம் இப்போது சந்தித்து இருக்கிறோம். இன்னமும் மழைக்காலம் இருக்கின்றது. சென்னையில் குறிப்பாக 2005, 2015ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்புகளும் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் தான். எனவே இவற்றினை எதிர்நோக்கி மக்கள் பிரதிநிதிகளும், பிற சேவை துறைகளின் அலுவலர்களும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
சென்னையில் தற்போது குடிநீர் ஆதாரமாக உள்ள நீர்நிலைகள் 6, அவை பூண்டி ஏரி. ரெட்ஹில்ஸ் ஏரி, சோழவந்தான் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஏரி போன்றவை சென்னைக்கு குடிநீர் வரத்து என்பது இருந்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆறுகளில் குடிநீர் இருப்பு தேவையாக 10.274 மில்லியன் கன அடி அளவில் நீர் இருக்கின்றது. இந்த ஏரிகளில் ஒட்டுமொத்தமாக 13,222 மில்லியன் கன அடி அளவு நீர் இருப்பு தேக்கி வைக்கலாம். ஆனால் தற்போது 10,274 மில்லியன் கன அடியாக 80% அளவிற்கு குடிநீர் கையிருப்பு இருக்கின்றது. என்றாலும் தமிழ்நாடு முதலமைச்சர் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி நிரம்பியவுடன் 100 கன அடி, 200 கன அடி, 500 கன அடி என்று ஏறத்தாழ 750 கன அடி உபரிநீர் திறந்து விட்டு பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்கின்ற வகையில் மிக கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சோழிங்கநல்லூர் தொகுதியைப் பொறுத்தவரை 60க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரிநீர் தான் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏற்கெனவே பெரிய மழைநீர் வடிகால் பணிகள் கட்டப்பட்டதன் காரணமாக இந்த ஆண்டு பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது, அந்தவகையில் இன்றைக்கு இந்த கூட்டம் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது. இன்றும் நாளையும் மோந்தா புயல் பாதிப்பினை எந்த அளவிற்கு எதிர்கொள்ளலாம் என்கின்ற வகையில் மாநில ஆராய்ச்சி நிபுணர் பிரதீப் ஜான் என்பவர் கூறியிருக்கிறார்கள். கூடுதல் மழை என்று எடுத்துக் கொண்டால் 2.4 மி.மீ அளவிற்கு அதாவது 20 செ.மீ அளவிற்கு கடந்தும் பெய்வதற்கு மிதமானது, அதிமிதமானது, அதிகம் என்று அனைத்து வகையிலும் தகவல் தந்திருக்கிறார். எனவே நமது அலுவலர்கள் அனைத்து வகையிலும் மோந்தா புயலினை எதிர்கொள்வதற்கும். அடுத்து வருகின்ற எந்தவிதமான பாதிப்புகளை கடப்பதற்கும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
டெங்கு பாதிப்பு தொடர்பான கேள்விக்கு; சுற்றி ஏடிஸ் கொசு என்பது நன்னீரில் ஏற்படுவது. வீட்டைச் எப்போதெல்லாம் மழைநீர் தேங்குகிறதோ அந்த கொசு உற்பத்தி ஆகும். தற்போது மழைக்காலம் என்பதால் கூடுதலாக உற்பத்தி ஆகும். சென்னை மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்புகள் என்பது 2 வருடங்கள் தான் அதிகபட்ச உயிரிழப்பு. 2012 இல் 66 பேர், 2017 இல் 65 பேர் இறந்து இருக்கிறார்கள். இந்த அரசு அமைந்ததற்கு பிறகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்திலேயே டெங்கு இறப்பு என்பது இருந்துக் கொண்டிருக்கிறது. பாதிப்புகளின் எண்ணிக்கை 1500 இந்த ஆண்டு கடந்து இருக்கிறது. இதற்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். இந்த அரசு அமைந்த பிறகு பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்பு கணக்கெடுப்புக் கோரி அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் டெங்கு பாதிப்பு 1500 கடந்திருக்கிலாம். ஆனால் உயிரிழப்பு என்பது இந்தாண்டு இதுவரை 9 பேர். இந்த 9 உயிரிழப்புகளும் பெரும்பகுதி இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள். அதையும்கடந்து காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது மருத்துவமனைக்கு வராமல் மருத்துவர்களின் ஆலோசனை செய்யாமல் வீட்டிலேயே இருந்தவர்கள், இந்தவகையில் தான் 9 பேர் உயிரிழப்பு. சிறிய அளவிலான காய்ச்சல் பாதிப்பு என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை கன்னியாகுமரி தொழில்தட திட்ட இயக்குநர்/சோழிங்கநல்லூர் மண்டல கண்காணிப்பு அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், கைத்தறித்துறை இயக்குநர்/பெருங்குடி மண்டல கண்காணிப்பு அலுவலர் திருமதி மகேஸ்வரி இரவிக்குமார், மண்டலக்குழுத் தலைவர்கள் வி.இ.மதியழகன், எஸ்.வி.ரவிச்சந்திரன், நிலைக் குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் முக்கிய சேவை துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
