சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியதன் காரணமாக அக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்தது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சராசரியாக 12 மி.மீ. மழை பெறப்பட்டது.
திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு, ஆயத்த நிலை மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், மழையினால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் விவசாயப்பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில், கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகள் விரைவாக கிடங்குகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னையில் மேற்கொண்டுவரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வருவாய் நிருவாக ஆணையர் சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நீலகிரி (கோத்தகிரி) மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அக்.,21 மற்றும் 22ம் தேதிகளில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புயலுக்கு வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் முகாம்களில் தங்க வைப்பதோ, கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தவோ இல்லை. இருப்பினும், தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்யும் கனமழையினால் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சொல்லிக் கொண்டு வருகிறார். அது தவறான செய்தி. அதற்கு எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் இரு வாரங்களில் பணிகள் முடிக்கப்படும். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதனை சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.