Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழை எதிரொலி; உஷாரா இருங்க மருத்துவர்களே...! மருத்துவமனைகளில் 24 மணிநேரம் மின்சாரம்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ள நீர் சூழ்ந்து நோய்த்தொற்று பரவும் அபயாம் உள்ளது. இதனால் பொது சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் நோய்க்கிருமிகளால் கடுமையான வயிற்றுப்போக்கு, லெப்டோஸ்பிரோசிஸ், காய்ச்சல், H1N1, டெங்கு, ஸ்க்ரப் டைபஸ் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன.

முக்கியமாக, அசுத்தமான தண்ணீரால் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உண்டாகின்றன. தண்ணீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் வருகிறது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 1500 கடந்து உள்ளது. ஆனால் உயிரிழப்பு என்பது இந்தாண்டு இதுவரை 9 பேர். இந்த 9 உயிரிழப்புகளும் பெரும்பகுதி இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள்.

அதையும் கடந்து காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது மருத்துவமனைக்கு வராமல் மருத்துவர்களின் ஆலோசனை செய்யாமல் வீட்டிலேயே இருந்தவர்கள். இதனை தடுக்க பொது சுகாதாரத்துறை எடுக்க வருகிறது. இதுதொடர்பாக, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து மருந்து, மாத்திரைகளும் தயார் நிலையில் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும்.

போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணி தாய்மார்களை மருத்துவமனைக்கு சுற்றளவில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் அவசரகால மருந்துகள், மாத்திரைகள், படுக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளதா என்பதையும் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும், திடக்கலைப்பு மற்றும் இறந்த விலங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனியாக படுக்கைகள் தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தண்ணீரில் குளோரின் பவுடர் கலப்பதை கண்காணிக்க வேண்டும். 1000 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் பிளீச்சிங் பவுடர் போட்டால், அதில் உள்ள கிருமிகளை அழிந்து விடும். அந்த வகையில், பிளீச்சிங் பவுடரை முறையான வழியில் கரைத்து கலந்தால் தண்ணீரால் வரும் நோய்களை தடுக்கலாம்.

இதனை உள்ளாட்சித் துறையின் மூலம் செய்யவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் தினமும் காலையில் சென்று நோயின் தாக்கம் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்கி கொசு புழுக்கள் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வருகிறது.

இதனால் கொசுக்களை அழிப்பதற்கான மருந்தை சேர்ந்து புகை தெளிப்பான்கள் மூலம் அடிக்கப்படுகிறது. இதற்கு தேவையான உபகரணங்கள், பணியாளர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் பொது சுகாதாரத்துறை நியமித்துள்ளது. மேலும், கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கு தேவையான அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:

நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த பகுதியில் முகாம் அமைப்பதுடன் கட்டுப்படுத்தும் பணியையும், சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொள்வார்கள். தமிழ்நாட்டில் 2,336 ஆரம்ப சுகாதார நிலையமும், 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையமும் தனியார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* காய்ச்சல் அறிகுறிகள்

உடல் வெப்பநிலை உயர்வு (காய்ச்சல்), மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தொண்டை வலி அல்லது எரிச்சல் இருமல் (வறட்டு இருமல் அல்லது சளி இருமல்), உடல் சோர்வு மற்றும் தலைவலி, மூட்டு வலி மற்றும் தசைப்பிடிப்பு, சில சமயங்களில் வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் இந்த அறிகுறிகள் பொதுவாக சாதாரணமாக தோன்றினாலும், முறையான கவனிப்பு இல்லையெனில் நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி (ப்ரோன்கைடிஸ்) போன்ற சிக்கலான நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

* மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை

மழையில் நனைந்த ஆடைகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஈரமான ஆடைகள் உடல்நிலையை குறைத்து சளியை ஏற்படுத்தலாம். சூப், கஞ்சி, சூடான பானங்கள் குடிப்பது உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும். கொசு கடி மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க, கொசு வலை மற்றும் பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும்.

* தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை

குடிநீரை நன்கு கொதிக்க வைத்து அல்லது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும். தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அடிக்கடி கைகளை கழுவுதல், குறிப்பாக நெரிசல் மிகுந்த இடங்களில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும். தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும், இது கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும். காய்ச்சல் அல்லது சளி அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.