*சுகாதார குழுவினர் தீவிர நடவடிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்மேற்கு பருவ மழையால், நகர் மற்றும் கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5 ஆண்டுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டது. இதையடுத்து, நகர மற்றும் கிராமபுறங்களில் இந்நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு கிராமங்களில், பரவிய டெங்குவால் பலரும் அவதிப்பட்டனர். அச்சமயத்தில், நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் நோயளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், மருத்துவ பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்தது. இந்நிலையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பல வாரமாக பெய்தது. பருவமழை அவ்வப்போது பெய்ததால், நகர மற்றும் கிராமபுறங்களில், மீண்டும் டெங்கு பீதி ஏற்படுவதை தடுக்க, டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த நடவடிக்கை மட்டுமின்றி, விழிப்புணர்வும் எற்படுத்தப்படுகிறது.
இதில், நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளிலும், சுகாதார குழுவினர் தனித்தனி குழுவாக சென்று, டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள், தினமும் வார்டு வாரியாக வீடு மற்றும் வணிக வளாக பகுதிகளில் நீர் நிலைகள் எவ்வாறு உள்ளது என கண்டறிந்து, அதில் அபேட் கிருமி நாசினி தெளித்து கொசுப்புழுக்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட வார்டுக்கு உட்பட்ட தினமும் குறிப்பிட்ட பகுதிகளில், காலை அல்லது மாலைநேரத்தில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடக்கிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டு மாதமாக அடிக்கடி பெய்த பருவமழையால், நகர மற்றும் கிராமபகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வீடுதோறும் நேரடியாக ஆய்வுமேற்கொண்டு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தண்ணீர் தேக்கி வைக்கப்படும் தொட்டிகளில் கிருமி நாசினி தெளிப்பதுடன், டெங்கு காய்ச்சலால் உண்டாகும் பாதிப்பு குறித்து அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 5 ஆண்டுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது, அதற்கான விழிப்புணர்வு அதிகப்படுத்தி, டெங்கு தடுப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்’’ என தெரிவித்தனர்.