*வாழ்வியல் முறைகள் மாறும் அபாயம்
*நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிறுமலை பகுதியில் குரங்குகள் வனத்திற்குள் உணவு தேடும் பழக்கத்தை மறந்து சாலையோரத்தில் வாகனங்களில் செல்வோர் தரும் உணவுகளை சாப்பிட்டு வருவதால் அதன் வாழ்வியல் முறைகள் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுமலை வளர்ந்து வரும் சுற்றுலா தல பகுதியாக உள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுமலையின் மேல் பகுதியில் வளமான பல்லுயிர் வகை காடுகளும், நடுமலை பகுதியில் வெப்ப மண்டல வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளது. சிறுமலையில் இதமான சீதோஷ்ண நிலை மற்றும் பசுமை நிறைந்த புல்வெளிகள், பல்வேறு மருத்துவ மூலிகைகளும், அரியவகை மரங்களும் நிரம்பி காணப்படுகின்றன.
இங்கு காபி, மிளகு, சவ்சவ், எலுமிச்சம்பழம், வாழை, பலா அதிகமாக விளைகின்றன. மேலும் சிறுமலை வனப்பகுதியில் காட்டுமாடு, குரங்கு, கேளையாடு, கடமான் உள்ளிட்ட விலங்குகள் அதிகம் உள்ளன. கோடை காலங்களில் வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி பட்டா காடு விவசாய தோட்டங்களுக்கு வருவது வழக்கம். வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்திருக்கும் நிலையில், தோட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குரங்குகள் சாலையோரத்திலே அமர்ந்து கொண்டு அவ்வழியே வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் தரும் பழங்கள், உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றன. சாலையோரத்திலே உணவு கிடைப்பதனால் குரங்குகள் காட்டுக்குள் உணவு தேடும் பழக்கத்தையே மறந்து இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டன.
இவ்வாறு உணவை நோக்கி காத்திருக்கும் குரங்குகள் சாலையின் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் அவ்வப்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுதவிர குரங்குகள் சாலையின் இடையில் பாய்வதால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறும் நிலை ஏற்படுகிறது. எனவே வனப்பகுதிக்குள் குரங்குகளுக்கு உணவு, தண்ணீர் வசதிகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை உதவி ஆணையர் ராஜசேகர் (ஓய்வு) கூறியதாவது: குரங்குகள் தனது வாழ்வியல் முறைகளை மறந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் சாலையின் ஓரத்தில் கை ஏந்தி பிச்சை எடுப்பது போல் காட்சி அளிக்கிறது.
மரங்களுக்கு மரம் தாவி பழங்கள், காய்கறிகளை உண்டு வாழ்ந்த குரங்குகள், தற்போது மனிதர்கள் உண்ணுவது போல் சாப்பாடு, கூூல் டிரிங்ஸ், பிஸ்கட் உள்ளிட்டவைகளை உண்ணுவதால் அவைகளின் உணவு பழக்கவழக்கம் மாறி, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர உணவுக்காக சாலையின் குறுக்கே பாய்வதால் வாகனங்களில் அடிபட்டு பரிதாபமாக இறக்கின்றன.
மேலும் இவைகளுக்கு உணவு கிடைக்காத பட்சத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனஓட்டிகளை அச்சுறுத்தி அவர்கள் கொண்டு செல்லும் உணவுகளை பிடுங்கி சென்று சாப்பிடும் நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உடனடியாக வனப்பகுதிக்குள்ளேயே உணவு, தண்ணீர் ஏற்பாடுகளை செய்து குரங்குகள் தனது வாழ்வியல் முறைகளை மாற்றி கொள்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி சிறுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பேப்பர்கள், பாலீத்தின் பைகள், தண்ணீர் பாட்டில்கள், மதுபாட்டில்கள் என ஆங்காங்கே வீசி சென்று விடுகின்றனர். இதனாலும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும். மேலும் சட்ட விரோதமான செயல்களை தடுத்து நிறுத்தி எந்த விதத்திலும் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவத வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
அடுத்த ‘டார்கெட்’ அடிவாரம் தான்
சிறுமலை மலைச்சாலை மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதில் குரங்குகள் முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து இறங்கி தற்போது 6 மற்றும் 7வது கொண்டை ஊசி வளைவுகளில் அதிகம் காணப்படுகின்றன.
தொடர்ந்து உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமேயானால் அடுத்து அடிவார பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் நிலை ஏற்பட்டு விடும். எனவே அதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளுக்கு வனத்திற்குள்ேளயே உணவு, தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.