Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணம் கொடுத்து கட்சிப்பதவி பெற காத்திருந்தவர்கள் பதறிப்போய் நிற்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கடைகோடி மாவட்டத்தில் பொன்னான தலைவராலும், ஜாதி, மதம், கட்சியை தாண்டிய செல்வாக்கால் எம்எல்ஏவான தேசப்பிதா பெயர் கொண்டவராலும் மலராத கட்சியில் கடும் அதிருப்தி நிலவுதாமே..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் மலராத கட்சியின் செல்வாக்கு மிகுந்த மாவட்டமான கடைக்கோடி மாவட்டத்தில் கட்சி அமைப்பு உச்சகட்ட கோஷ்டி பூசல், தன்னால்தான் கட்சி என நினைக்கும் முக்கிய தலைவர்களால் கட்சியின் வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளதாம்..

பொன்னான தலைவர் தனக்காகத்தான் தாமரைக்கு 38 சதவீத வாக்கு விழுகிறது என கூறியது அதிருப்தியை கிளப்பியுள்ளதாம்.. அடுத்து, தேசப்பிதாவின் பெயர் கொண்ட தலைவருக்கு ஜாதி, மதம், கட்சி தாண்டிய செல்வாக்கு இருந்துச்சு.. ஆனால், அவரும் வெற்றி பெற்ற பின்பு முன்புபோல் செயல்படாமல் இருப்பது, எம்.எல்.ஏ அலுவலகத்தை திறக்காமல் பூட்டியே வைத்திருப்பது, அவருடன் காலை வாக்கிங் முதல் தேர்தல் களம் வரை உடனிருந்து வெற்றிக்கு உழைத்தவர்களை அவரது சாரதியின் தூண்டுதலால் ஒதுக்கி வைத்தது போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம்..

போதாதக்குறைக்கு தற்போது மேற்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவரின் செயல்பாடு சுத்தமாக முடங்கியுள்ளதும், கிழக்கு மாவட்டத்தில் போதுமான அளவிற்கு செயல்பாடு இன்மை, கட்சியின் மாநில உச்சபதவி வகிக்கும் கேரள எல்லையோர மலையடிவார கிராம தலைவரின் லீலைகள் என கட்சி ஒட்டுமொத்தமாக செயலிழந்த நிலையில் உள்ளதாம்.. இதனால், கட்சி பதவி மற்றும் வேட்பாளர்களாக புதியவர்களை நியமிக்க வேண்டும்னு தொண்டர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து வர்றாங்க..

இந்நிலையில் மலராத கட்சி சார்பில் 42 தொகுதிகளின் உத்ேதச வேட்பாளர்கள் பட்டியல் என உளவு பிரிவு அனுப்பியதாக சிலர் பரப்பி வருகின்றனராம்.. அதில் நாகர்கோவில் தொகுதியில் பொன்னானவர், அடுத்து கவுன்சிலர், எம்.பி பதவிக்கு சீட் கேட்ட மலை தெய்வத்தின் பெயர் கொண்டவரின் பெயர் இருக்காம்.. தற்போது இந்த பட்டியலை காண்பித்து தனக்கு ஆதரவு திரட்ட தொடங்கி விட்டார் மலை தெய்வத்தின் பெயர் கொண்டவர். ஆனால், சூடுபட்ட பூனையாக பணத்தை தற்போது யாருக்கும் செலவு செய்வதை நிறுத்திவிட்டதாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தந்தை, தனயன் போட்டிப்போட்டு கூட்டும் கூட்டத்திற்கு தவறாமல் போனா கூட பாட்டாளி சொந்தங்களின் தவிப்பு மட்டும் தொடருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கட்சியில் தந்தைக்கும், தனயனுக்கும் இடையே நடக்கும் குடுமிபிடி சண்டையால் ஒட்டுமொத்தமாக அந்த கட்சியே கலகலத்து போயுள்ளது என்பதுதான் பாட்டாளி சொந்தங்களின் தவிப்பாக இருக்காம்.. குறிப்பாக வெயிலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தந்தை கூட்டும் கூட்டத்துக்கும் செல்கிறார்களாம்.. தனயன் கூட்டும் கூட்டத்துக்கும் செல்கிறார்களாம்..

காரணம், எதிர்காலத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.. இதில் நாமாக போய் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணமாம்.. அதற்கேற்ப தந்தையும், தனயனும் வௌியிடும் போட்டி நிர்வாகிகள் பட்டியல் என்பது வெயிலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை வெளியாகவில்லை என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் அந்த கட்சியின் அடிமட்ட சொந்தங்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மகாராஷ்டிரா கவர்னர் தமிழ்நாட்டிற்கு பாராட்டு சான்று வழங்கியுள்ளாரே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடந்தது அற்புதம். முருக பக்தர்களுக்கு இந்த கும்பாபிஷேகம் மிகுந்த மகிழ்ச்சி. எந்த கும்பாபிஷேகத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த கும்பாபிஷேகத்திற்கு அமைந்திருக்கு.. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே கும்பாபிஷேகத்தை கண்டு ஆடிப்போய் இருக்காங்க.. இப்படி சொன்னது வேறு யாருமல்ல. மகாராஷ்டிரா கவர்னர் சிபிஆர் தான்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்ெசந்தூர், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட கோயில்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட அவர்தான் மடை திறந்த வெள்ளம் போல இந்த வார்த்தைகளை மனம் திறந்து கொட்டியிருக்கிறார்.. என்ன தான் நம்மூர் கவர்னர் தமிழ்நாடு அரசுக்கு பல விஷயங்களில் முட்டுக்கட்டை போட்டாலும், தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா கவர்னருமான சிபிஆர் மனம் திறந்து திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை பாராட்டி இருக்கிறார்.

அந்த அளவுக்கு திருச்செந்தூர் கோயிலில் மேம்பாட்டுப் பணிகள். ஆரம்பம் முதலே திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரை மாற்றுவேன் எனக் கூறிய துறையின் அமைச்சர் பம்பரமாக சுற்றிச்சுழன்று அதை செயலில் காட்டியிருக்கிறார்.. முதல்வரின் ஆலோசனை, அறிவுரைகளை ஏற்று அடிக்கடி திருச்செந்தூருக்கு விசிட், கும்பாபிஷேகத்திற்காக இரவு, பகல் பாராது திருச்ெசந்தூரிலேயே முகாம் என பணிகளை துரிதப்படுத்தி இருந்தாரு.. பக்தர்கள் தங்க குடில்கள், நெரிசல் இன்றி பக்தர்கள் வழிபாடு செய்ய வசதிகள் என திருச்செந்தூர் கோயிலை உலகத் தரத்துக்கு இணையாக மெருகேற்றியுள்ளார்..

இந்து சமய அறநிலையத்துறையை பற்றி வாய் திறப்பவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து பாருங்க என்கின்றனர் பக்தர்கள். நல்ல விஷயங்களை பாராட்டித் தானே ஆகணும். நம்மூரு கவர்னருக்கு இது இன்னும் தெரியவில்லையே என்று அங்கலாய்க்கின்றனர் பக்தர்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பணம் கொடுத்து கட்சிப்பதவி பெற காத்திருந்தவர்கள் சேலத்துக்காரரின் அதிரடி நிராகரிப்பால் திகைத்து போய் நிற்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மெடல் மாவட்ட இலைக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளராக மாஜி சபாநாயகரின் தம்பி இருக்கிறார். இவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, நீண்டதொரு பட்டியலை தயாரித்துக் கொண்டு சேலத்துக்காரரின் ஒப்புதலுக்காக சென்றாராம்.. இவர் சென்ற நேரம் பார்த்து, பக்கம்பக்கமாய் சேலத்துக்காரருக்கு ஒரு பெரிய புகார் பட்டியலும் போய் சேர்ந்திருக்கு.. அதில், பரிந்துரை பட்டியலில் உள்ள யார் யாரிடம் எந்த பதவிக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த புள்ளி விவரங்கள் இருந்துச்சாம்..

இது தெரியாமல் பட்டியலை கொடுக்க, சேலத்துக்காரரோ சிரித்துக் கொண்டே வாங்கி, ஒட்டுமொத்த பட்டியலையும் நிராகரித்து விட்டாராம்.. இதனால், பணம் கொடுத்து பதவியை பெற காத்திருந்தவர்கள் அனைவரும் யாரிடம் போய் சொல்வது என்பது தெரியாமல் திகைத்து நிற்க, மாஜி சபாநாயகரின் தம்பியோ, வாங்கிய பணத்தை எப்படி திருப்பி கொடுக்க முடியும் என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.