Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பணம் கொடுத்தால் லொகேஷன், கால் விவரங்கள் எதைக் கேட்டாலும் நிமிடத்தில் ரெடி: கேரளாவை கலக்கிய ஹேக்கர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: பணம் வாங்கி பலரின் கால் விவரங்கள், லொக்கேஷன் உள்பட தகவல்களை பரிமாறி வந்த கேரளாவை சேர்ந்த ஹேக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி ஆனந்துக்கு ஒரு தகவல் வந்தது. அதில், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக ஹேக்கிங் செய்து வருவதாகவும், உடனடியாக அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசுக்கு எஸ்பி ஆனந்த் உத்தரவிட்டார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் அடூர் பகுதியைச் சேர்ந்த ஜோயல் (23) என்ற வாலிபர் பிடிபட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் போலீசுக்கே அதிர்ச்சியளிக்கும் பல விவரங்கள் கிடைத்தன. சைபர் செக்யூரிட்டியில் பட்டம் பெற்றுள்ள இந்த வாலிபர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிறுவனத்திற்காக பலரின் போன் கால், டவர் லொகேஷன் உள்பட விவரங்களை இவர் சேகரித்துக் கொடுத்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் இது போன்ற விவரங்கள் தேவைப்படுபவர்கள் தன்னை அணுகலாம் என்று கூறி சமூக வலைதளங்களில் இவர் விளம்பரமும் செய்துள்ளார். இதைப் பார்த்து கேரளாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், தமிழ்நாட்டில் இருந்தும் கூட ஏராளமானோர் ஜோயலை அணுகியுள்ளனர். காதலன், காதலி, கணவன், மனைவி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இவரை அணுகி விவரங்களை தெரிந்து கொண்டுள்ளனர்.

காதலி எங்கெல்லாம் சென்றார், யார் யாருடன் பேசுகிறார் என்ற விவரங்களை காதலனுக்கும், இதேபோல கணவனின் விவரங்களை மனைவிக்கும், மனைவியின் விவரங்களை கணவனுக்கும் இவர் ஹேக் செய்து கொடுத்துள்ளார்.

இதற்காக இவர் பெருமளவு பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைக் கூட மிகவும் துல்லியமாக சேகரித்து கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணைக்குப் பின் ஜோயலை போலீசார் பத்தனம்திட்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விசாரணையில் மேலும் பல முக்கிய விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி ஆனந்த் கூறினார்.