புதுடெல்லி: அரியானாவின் ஷிகோபூரில் நடந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வத்ராவிற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தை தளமாக கொண்டு செயல்படும் ஆயுத ஆலோசகர் சஞ்சய் பண்டாரியுடன் தொடர்புடைய வழக்கில் பணமோசடி வழக்கிலும் ராபர்ட் வத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
பண்டாரியை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனையடுத்து ஜூலையில் அவரை தப்பியோடிய குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் அறிவித்து இருந்தது. இவர் வருமான வரித்துறையின் சோதனையை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு லண்டன் தப்பிச்சென்றார். இந்நிலையில் சஞ்சய் பண்டாரி வழக்கிலும் ராபர்ட் வத்ராவிற்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். பணமோசடி வழக்கில் இது ராபர்ட் வத்ராவிற்கு எதிரான இரண்டாவது குற்றப்பத்திரிக்கையாகும்.


